போலி ட்விட்டர் கணக்கு ; கமிஷனரிடம் டைரக்டர் ஹரி புகார்..!

 

 

பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான தகவல்களை பரப்புவது தொடந்துகொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் நடிகர், நடிகைகளின் பெயரை பயன்படுத்தி தவறான தகவல்களை வெளியிட்டு சங்கடத்தில் ஆழ்த்துவதுதான் வழக்கமாக இருந்தது.

ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இயக்குனர் ஹரியின் பெயரை பயன்படுத்தி  யாரோ ஒரு சில விஷமிகள் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி அவர் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கை தொடங்கி அவரைப்பற்றி தவறான செய்திகளை பரப்பிவந்தனர். இதனை அறிந்த ஹரி கடந்தவருடம் பிப்ரவரி மாதம் கோவை காவல்துறை ஆணையாளரிடம் இது குறித்து புகாரும் அளித்துள்ளார்.

ஆனால் விஷமிகளின் ஆட்டம் ஓய்ந்தபாடில்லை. இப்போது பேஸ்புக்கை விட்டு விட்டு டிவிட்டரில் அவர் பெயரில் போலிக் கணக்கு துவங்கிவிட்டனர். பொறுத்து பொறுத்து பார்த்த ஹரி, தற்போது நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

அந்தப்புகாரில், “இயக்குனர் ஹரி என்ற எனது பெயரில், என்னுடய அனுமதியின்றி, எனக்கு தெரியாமல்டிவிட்டரில் கணக்கை ஏற்படுத்தி, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதில் என்னுடய விவரங்களை தவறாக சித்தரித்துள்ளனர். இது என்னை அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது. அந்த போலி ட்விட்டர் கணக்கை தடை செய்து, விஷமிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என இயக்குனர் ஹரி குறிப்பிட்டுள்ளார்.. 

பின்குறிப்பு : ஹரி அந்த புகாரில் குறிப்பிட்டிருந்த அந்த ட்விட்டர் கணக்கிற்கு இன்று சென்று பார்த்தபோது அது முடக்கப்பட்டு விட்டது தெரியவந்துள்ளது.