சினேகன்-தமிழிசையின் காரமான பேச்சால் களைகட்டிய ‘எழுவாய் தமிழா’ ஆல்பம் விழா..!

ezhuvai thamizha album launch

நேற்று மாலை இயக்குனர் காளிங்கன் என்பவர் இயக்கியுள்ள ‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர், ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சினேகன் பேசும்போது, “இந்த ஆல்பம் எடுக்க முன்வந்த தயாரிப்பாளரின் துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும்.. தமிழ் இருப்பதையும் தமிழன் இருப்பதையும் நினைவூட்டல் செய்யவேண்டிய காலகட்டத்தில்தான் இன்று இருந்துகொண்டு இருக்கிறோம்.

இதில் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல் போனாலும் எழுவாய் தமிழா என்கிற ஒற்றை சொல்லிற்காக இங்கு அனைவரும் கூடியிருப்பது மகிழ்வாக இருக்கிறது. சிறுசிறு தடுமாற்றங்களும் தடம் மாற்றங்களும் இருந்தாலும், இவர்கள் செய்திருக்கும் இந்த பணி மிகவும் சிறப்பானது.

சரியோ தவறோ, இந்த இளைஞர்களுக்கு அவன் வயதில் அவனுக்குள்ள பக்குவத்தில் அந்த அறிவுக்கு தகுந்த வேகம் இருக்கிறது இல்லையா, இதுதான் அடுத்த தலைமுறையிடம் நாம் தாரைவார்த்து கொடுக்க கூடிய களம். அதை சரியாக செய்திருக்கிறார்கள்.

எவனெல்லாம் உண்மையை பேசுகிறானோ அவனெல்லாம் திமிரு பிடித்தவன் என தமிழகத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. அப்படி ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை உண்மையே பேசி கேட்ட பெயர் வாங்கிய ஆள் தான் நான். அதற்காக என்னால் பேசாமல் இருக்கவும் முடியாது. தமிழ்ப்பற்றாளானாக இருக்கிறவர்களை பைத்தியக்காரர்களாகத்தானே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். வெறியாளனாக இருப்பவனை மட்டும்தான் இந்த உலகம் வேறுமாதிரியாக பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதனால் சில நேரங்களில் வெறியாளனாக வெடிக்க வேண்டி இருக்கிறது. தமிழ்படிக்க தமிழ்படிக்க தலை கனக்கும் பரவாயில்லை.. தமிழ் படி.. வழி பிறக்கும்” என பேச்சில் வழக்கம்போல ஆவேசம் காட்டினார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் பேசும்போது, “தமிழ்படிக்க தமிழ்படிக்க தலை கனக்கும் என சினேகன் சொன்னார்.. சிலநேரங்களில் தமிழ்படிப்பவர்களை கேலி செய்வதை பார்க்கும்போது மனம் கனக்கிறது.. திரையிசையை பற்றி இங்கே தமிழிசை பேசவேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.. மெட்டுக்கு பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்கிற காலம் போய் இப்போது துட்டுக்கு பாட்டு என்கிற நிலை உருவாகிவிட்டது

இந்த பாடலை எழுதிய ரேஷ்மன் குமார், இசையமைத்த நவீன் சங்கர் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இந்த எழுவாய் தமிழா ஆல்பத்தை பார்க்கும்போது, ஒரு மகப்பேறு மருத்துவராக நான் சொல்வது இதுபோன்று இன்னும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. காரணம் பிறப்பது எல்லாம் தமிழ் குழந்தைகளாக இருக்கும் என்பதால்..தான்.

அதனால் அழுவாய் தமிழா என்கிற நிலை மாறி எழுவாய் தமிழா என்கிற நிலையை உருவாக்கவேண்டும். எத்தனை தடங்கல்கள் வந்தாலும் தமிழை முன்னெடுத்து செல்வதில் நாம் சோர்ந்துபோய்விட கூடாது ஆணிவேராக நாம் அழுந்த வளரும்போது நம்மை யாரும் அழித்துவிட முடியாது. அதிலும் தமிழ் வேராக இருக்கும்போது, தமிழ் வேறாக பார்க்கப்படாது.. தமிழ் உயிராக பார்க்கப்படும்” என வாழ்த்தி பேசினார்..