என்ன சத்தம் இந்த நேரம் – விமர்சனம்


ஜெயம் ராஜா, மானு தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த வாய்பேச இயலாத, காது கேட்காத நான்கு பெண் குழந்தைகள். ராஜா நான்கு குழந்தைகளுக்காக அதிகம் சம்பாதிக்கவேண்டும் என வீட்டிற்கு வராமல் நேரம் காலம் பாராமல் உழைக்கிறார். ஆனால் மானுவோ அதையே காரணம் காட்டி ராஜாவிடம் இருந்து விவாகரத்து கோருகிறார்.

விவாகரத்து கிடைக்கவிருக்கும் அன்றைய தினம் நான்கு குழந்தைகளும் பள்ளியில் இருந்து வண்டலூர் ஜுவிற்கு சுற்றுலா போகிறார்கள். போன இடத்தில் நான்குபேரும் உள்ளே வழி தவறிவிட அவரை தேடுகிறார்கள் உடன் வந்த டீச்சரான மாளவிகாவும் ஜூ வாட்ச்மேனான நிதின் சத்யா மற்றும் இமான் அண்ணாச்சி மூவரும்..

இந்த நிலையில் ஜூவில் இருந்த மிகப்பெரிய பாம்பு ஒன்று கூண்டை விட்டு வெளியே தப்பி விடுகிறது. சிறிது நேரத்தில் குழந்தைகளின் தந்தையான ஜெயம் ராஜாவும் போலீஸ் அதிகாரி புரவலனும் குழந்தையை தேடுவதில் இணைந்துகொள்கிறார்கள். இறுதியில் பாம்பிடமிருந்து அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள், தம்பதிகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

இயக்குனரான ஜெயம் ராஜா நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் படத்திலேயே பாஸ்மார்க்கில் ஸ்கோர் பண்ணுகிறார். அவரை வாழ்த்தி வரவேற்போம். கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன் பார்த்த மாதிரியே அப்படியே இருக்கிறார் அவர் மனைவியாக வரும் மானு.

தற்கொலை செய்யப்போகிறேன் என தூக்க மாத்திரை நிதின் சத்யா வாங்கி வைத்திருக்க, கடைசியில் அது பாம்பிடம் இருந்து குழந்தைகளை காப்பாத்த உதவுவது லாஜிக்காக இடித்தாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நிதின் சத்யாவின் லொடலொட வாய்க்கு பூட்டுப்பூடும் கேரக்டரில் குழந்தைகளை தேடும் டீச்சராக வரும் மாளவிகா வேல்ஸ் களையான முகத்துடன் நம்மை கவருகிறார். ஒரு நுறு முறையாவது நிதினை ‘யோவ்’ என அழைத்திருப்பார் போங்கள்.

பாம்பு தப்பிவிட்ட சீரியசான நேரத்தில் கூட மயில்குஞ்சை தேடும் அண்ணாச்சி ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் கடைசியில் பாம்பிடம் சிக்கும்போது பதற வைக்கிறார். சிரிப்பு திருடர்களாக சூழ்நிலைக்கு பொருந்தாமல் வந்தாலும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் மனோபாலாவும் சிவசங்கர் மாஸ்டரும்.

இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகின்றனர் ஒரே பிரசவத்தில் பிறந்த அந்த கின்னஸ் ரெக்கார்டு குட்டீஸ்களான அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்கிற நான்கு பேரும். உண்மையிலேயே பேசும் திறன்கொண்ட குழந்தைகளான இந்த நான்கு பேரும் மாற்றுத்திறனாளிகளாக தங்களது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சஞ்சய் லோக்னாத்தின் கேமரா ஒரு மணி நேரத்திற்கு மேல் ஜுவை திகிலுடன் சுற்றிக்காட்டுகிறது. நாகாவின் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்திருக்கலாம். நான்கு குழந்தைகளை வைத்து ஒரு விறுவிறுப்பான கதை பண்ணியிருக்கும் இயக்குனர் குரு ரமேஷ் அதை காட்சிப்படுத்தலில் ஆங்காங்கே சில இடங்களில் தடுமாறி நின்றிருக்கிறார்.

குறிப்பாக குழந்தைகள் மிஸ்ஸிங் என்பதும், பாம்பு தப்பிவிட்டது என்பதும் தெரிந்த பின்னால் மிகப்பெரிய அதிரடி ஆபரேசன் எதுவும் இல்லையே.. ஆழ்குழாய் துளைக்குள் குழந்தை ஒன்று தவறி விழுந்துவிட்டாலே அந்த இடமே அல்லோல கல்லோலப்படும் இந்த நேரத்தில், ஜூவினுள் நான்கு குழந்தைகள் மாட்டிக்கொண்டார்கள் என்றால் மொத்த சிட்டியே பதறவேண்டாமா? அதில் இயக்குனர் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

அடுத்தவர் பிரச்சனையை பற்றி கவலைப்படாமல் கடுப்பேற்றும் பத்திரிக்கை நிருபருக்கு அமைச்சர் மூலமாக வைக்கும் சூடு ரசிக்கவைக்கிறது. ஒரே மாதிரியான நான்கு குழந்தைகளும் மிகப்பெரிய ஒரு கிராபிக்ஸ் பாம்பும் இருப்பதால் குட்டீஸ்கள் மட்டுமல்ல, அவர்களை பார்ப்பதற்காக பெரியவர்களும் கிளம்பலாம் இந்தப்படத்திற்கு.