என்னமோ ஏதோ – விமர்சனம்

                

மணிரத்னம் என்கிற மோதிரக்கையால் குட்டுப்பட்ட கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படமாக வந்திருப்பதால் படத்தில் நிச்சயமாக ‘என்னமோ ஏதோ’ இருக்கும் என்கிற எதிர்பார்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா இந்தப்படம்..?

 

சேனல் ஒன்றில் வேலை பார்க்கும் கௌதம் முதலில் ஒரு பெண்ணை காதலிக்க, அந்தப்பெண் இவரை ஏமாற்றி இன்னொருவரை திருமணம் செய்துகொள்கிறார். அந்த இன்னொரு நபரும் கதாநாயகியான ரகுல் பிரீத் சிங்கை ஏமாற்றிவிட்டுத்தான் இந்த திருமணத்தை செய்துகொள்கிறார். இதில் பாதிக்கப்பட்ட கௌதமும் ரகுல் பிரீத் சிங்கும் நண்பர்களாக மாறுகிறார்கள்.

 

ஒரு கட்டத்தில் கௌதமுக்கு ரகுல் பிரீத் சிங் மீது காதல் வருகிறது. அதை தெரியப்படுத்துவதற்குள் அவருக்கு வேறு ஒருவர் புரபோஸ் செய்துவிடுகிறார். ஆனாலும் ரகுல் பிரீத் சிங்கின் மனதில் கௌதமே ஆக்கிரமித்து இருக்க, இதனால் தனது புதிய காதலருடன் சண்டை போட்டு பிரிந்து கௌதமை தேடிவருகிறார்.

 

இதற்கிடையே நொந்துபோன கௌதமின் மனது சில நாட்களில் வெட்னரி டாக்டரான நிகிஷா படேல் மீது திரும்பியதை அறிந்து தன் காதலை சொல்லாமல் திரும்புகிறார்ரகுல் பிரீத் சிங்.. ஆனால் திருமண ஏற்பாட்டின்போது திடீர் சிக்கலால் கௌதம்-நிகிஷா திருமணம் நின்றுவிடுகிறது. கடைசியில் யார் யாருடன் இணைந்தார்கள் என்பதுதான் ஸ்ஸ்ஸ்..அப்பாடா என சொல்லவைகிற க்ளைமாக்ஸ்ஸ்ஸ்….

 

கௌதம் கார்த்திக் துறுதுறுவெனத்தான் நடித்திருக்கிறார். ஆனால் அடிக்கடி திடீர் திடீரென முளைக்கும் காதலும் அதன் முறிவுகளும் அவரது நடிப்பில் ஒரு செயற்கைத்தன்மையை உருவாக்கி விடுகின்றன. நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் பிரதர்..

 

பிரியாமணியையும் நித்யா மேனனையும் மிக்ஸ் செய்தால் கிடைக்கும் புதிய உருவம் போல இருக்கிறார் கதாநாயகி ரகுல் பிரீத்சிங். சில இடங்களில் நடிக்கவும் செய்கிறார். வெட்னரி டாக்ராக வரும் நிகிஷா படேல் அசத்தல்.

 

காமெடி நடிகர் இல்லாத குறையை பூர்த்தி செய்ய முயற்சி செய்திருக்கிறார் இளைய திலகம் பிரபு. கௌதமின் அம்மாவாக அனுபமா குமார்.. கொஞ்சம் மிகையான நடிப்புதான்.

 

இசை டி.இமானா என சந்தேகத்துடன் கேட்க வைத்திருக்கிறது. ‘முட்டாளா.. முட்டாளா’ பாடல் மட்டும் சுவை. சில காட்சிகள் சுவையாக இருந்தாலும் ஏற்கனவே பல படங்களில் பார்த்ததால் அலுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ஒரே ஆளுக்கு எத்தனை காதல். எத்தனை காதல் முறிவு. எதிலும் அழுத்தமே இல்லை.

 

‘அந்த’ மாதிரி ஆள் என நினைத்து கௌதமின் நிச்சயதார்த்தம் தடைபடுவது கலாட்டா. அதேபோல கடைசியில் ரகுல் பிரீத் சிங்கின் திருமணத்தில் அடியாட்களின் காமெடி கலாட்டாவும் சூப்பர். தெலுங்கில் ஹிட்டான படம் என்கிற தைரியத்தில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் ரவி தியாகராஜன். ஆனால் தமிழுக்கு மாற்றியதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.