துபாய் படப்பிடிப்பை முடித்த எனிமி படக்குழு


பத்து வருடங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் இணைந்து நடித்த சமயத்தில் இருந்தே, நெருங்கிய நண்பர்களாக இருந்து வருபவர்கள் விஷாலும் ஆர்யாவும்.. இந்தநிலையில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ‘எனிமி’ என்கிற படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.

ஆர்யா-விஷால் கூட்டணி மட்டுமல்ல, 15 வருடங்களுக்கு முன் சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமான மம்தா மோகன்தாஸ், தற்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார். மிருணாளினி ரவி இன்னொரு கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

பலகட்டமாக நடந்துவந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துபாயிலும் நடைபெற்றது. தற்போது அங்கே படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளனர் ஆர்யா, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளதாம்.