எனக்கு இன்னொரு பேர் இருக்கு – விமர்சனம்

Enakku-Innoru-Per-Irukku

கேங்க்ஸ்டர் கதையில் காமெடி என்பது கத்தி மேல் நடப்பது போலத்தான்.. அந்த ரூட்டில் ஜிகர்தண்டா போல ஒரு சில படங்கள் தான் வெற்றியை சுவைத்துள்ளன. அந்தவகையில் கேங்ஸ்டர் காமெடி பிளேவரில் வெளியாகி இருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ரசிகர்களை ஈர்த்துள்ளதா…? பார்க்கலாம்.

ராயபுரம் ஏரியாவில் நைனா’ என்கிற தாதா பதவிக்கு ‘சித்தப்பு’ சரவணன், விடிவி கணேஷ் இருவரும் அமர ஆசைப்பட அதில் விடிவிக்கு உதவுகிறார் இருவருக்கும் நண்பரான மொட்ட ராஜேந்திரன். ஆனால் சரவணன் தந்திரமாக ‘நைனா’ நாற்காலியில் உட்கார, விடிவி ஜெயிலுக்கு போகிறார்.. மொட்ட ராஜேந்திரன் ராயபுரத்தை விட்டே போகிறார்.

நிற்க.. இப்போது சரவணனுக்கு வயதாகவே ‘நைனா’ பதவியில் தனக்கு பிறகு வாரிசு ஒருவரை நியமிக்க முடிவுசெய்கிறார். அவருக்கு ஒரே மகள் ஆனந்தி மட்டுமே என்பதால், அவருக்கு தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையை அடுத்த ‘நைனா’வாக்க முடிவு செய்து, மிகப்பெரிய ரவுடியை மாப்பிள்ளையாக தேடுகிறார்..

இந்த நிலையில்தான், ரத்தத்தை கண்டாலே வலிப்பு வந்துவிடும் விடிவியின் மகன் ஜி.வி.பிரகாஷ், சரவணன் அன் கோவின் ஆள்தேடும் கோஷ்டியான கருணாஸ்-யோகிபாபு கண்களில் ரவுடியாக தென்படுகிறார். இதனை அவர்கள் சரவணனிடம் சொல்ல, அவர் ஆனந்தியை ஜிவிக்கு மணம் முடிக்க சம்மதிக்கிறார். தன்னை ரவுடியாக அவர்கள் நினைத்தது தெரியாமல், ஆனந்தியின் மேல் உள்ள காதலால் திருமணத்திற்கு டபுள் ஓகே சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்..

ஆனால் திருமணமான அன்று இரவே ஜி.வியின் கண் முன்னே அவரது மாமனாரை தாக்குகிறார்கள் சரவணனால் ஏற்கனவே கொல்லப்பட்ட ‘பழைய நைனா’வின் மகனும் அவரது ஆட்களும். அப்போதுதான் ஜி.வி.பிரகாஷ் ஒரு ‘அட்டகத்தி’ என்பது சரவணனுக்கு தெரியவருகிறது. வில்லனிடம் இருந்து தப்பி, குடும்பத்துடன் அனைவரும் அதே பகுதியில் தலைமறைவாக, சரவணனின் ஒவ்வொரு ஆட்களாக வெட்டி சாய்க்கிறான் வில்லன்.. சரவணன் குடும்பத்தை அழிக்க அவர்களையும் தேடுகிறான்.

இப்படிப்பட்ட சூழலில் ஜி.வி.பிரகாஷின் அப்பா விடிவி கணேஷ் ஜெயிலில் இருந்து ரிலீஸாக, அவருடன் மொட்ட ராஜேந்திரன் கூட்டு சேர, இவர்கள் மூவரின் உதவியுடன் வில்லனை வீழ்த்தி, ‘அட்டகத்தி’ ஜி.வி.பிரகாஷ் எப்படி ‘ஆக்சன் கத்தி’யாக மாறுகிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஜி.வி.பிரகாஷுக்கு காஸ்ட்யூம் மாறியிருக்கிறதே தவிர கலர் மாறவில்லை.. அதே டென்சன் பார்ட்டி.. அதே டபுள் மீனிங் டயலாக் என பழகிய குதிரையிலேயே சவாரி செய்திருக்கிறார்.. ரத்தத்தை பார்த்ததும் வலிப்பு வருவதும், அதன்பிறகு அவரது ரியாக்சனும் ரசிக்க வைக்கிறது. ஆனந்திக்கு ரொமான்ஸ், சென்டிமென்ட் என அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள்.. அவரும் அதை மட்டுமே செய்திருக்கிறார்.

மூவர் கூட்டணியில் ‘சித்தப்பு’ சரவணனுக்கு படம் முழுவதும் கிட்டத்தட்ட ஹீரோவாகவே வலம் வரும் வாய்ப்பு. கெட்டியாக பிடித்துக்கொண்டு ஜமாய்த்திருக்கிறார். விடிவி கணேஷின் ‘ஸ்கெட்ச்’ போடுவதும் அதை மொட்ட ராஜேந்திரன் செயல்படுத்துவதும் என ஹிட் படங்களில் இருந்து சூப்பர் சீன்களை உருவி காமெடியாக்கி இருக்கிறார்கள்… ‘கபாலி’யை கூட விட்டுவைக்கவில்லை.

காளகேயர் பாஷை பேசும் கருணாஸும், நேரம் காலம் தெரியாமல் உளறிக்கொட்டும் யோகிபாபுவும் தன படத்தை சீரியஸாக கொண்டுசெள்ளவிடாமல் தடுக்கும் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். குணச்சித்திர நடிப்பில் சார்லி சிறப்பித்துள்ளார். சரவணின் காதலியாக, விடிவி கணேஷின் மனைவியாக வரும் நிரோஷாவின் முக்கோண காதல்கதை கிச்சு கிச்சு மூட்டுகிறது. களிமாக்சில் மன்சூர் அலிகானையும் பொன்னம்பலத்தையும் எண்பதுகளின் லுக்கில் இறக்கிவிட்டு அதிரவைக்கிறார்கள்.

வில்லனாக வரும் லாரன்ஸ் அந்த கேரக்டருக்கு ஏக பொருத்தம்.. முன்பே சொன்ன மாதிரி கேங்ஸ்டர் கதையில் காமெடி என்பது ரிஸ்க்கானது.. இந்தப்படத்தில் வாய்விட்டு சிரிக்கலாம் என நினைக்கும்போதே வரிசையாக ஆட்களை போட்டுத்தள்ளுகிறார்கள். சீரியஸ் மோடுக்கு தயாராகும்போது அதை அப்படியே காமெடியாக்கி கெக்கேபிக்கே என சிரிப்பூட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, கடந்த வருடம் வெளியாகி ஹிட்டன ஒரு படத்தின் ப்பட்டமான சாயலாகவே இந்தப்படம் இருக்கிறது. அந்தந்த நேரத்திற்கு மட்டுமே சிரிக்க முடிவதால் படம் முடிந்து வெளியே வந்து யோசித்து பார்த்தால் எந்த காமெடி வசனமும் காட்சியும் மனதில் பதியவில்லை என்பதுதான் நிஜம்.