“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி

த்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது டைரக்சனில் இந்த முறை கார்த்தியுடன் ‘தம்பி’ படத்திற்காக கைகோர்த்துள்ளார். இந்தப்படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்க, அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்தியின் ஜோடியாக நிகிலா விமல் நடிக்க, மற்றும் அம்மு அபிராமி, அன்சன் பால், ஹரீஷ் பெராடி, இளவரசு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் மூலம் ஜோதிகாவின் சகோதரர் சூரஜ் முதன்முறையாக தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.

96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்தவிழாவில் ‘தம்பி’ படம் குறித்து தனது சொந்த ணைபவத்தையும் சேர்த்து பகிர்ந்துகொண்டார் கார்த்தி.

“இந்தக்கதை உருவாக இரண்டு வருடம் ஆகிருக்கு. இயக்குநர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு முதல்ல பயமா இருந்தது. ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, ஜாலியா இருந்தார். பாபநசம் படத்துக்கு அப்புறம் அவர் மேல இண்டலிஜண்ட் இயக்குநர்னு முத்திரை விழுந்திடுச்சு. அதுக்கேத்த மாதிரி அவரோட மெனக்கெடல் அபாரமா இருந்தது. தினமும் டிஸ்கஸன் உட்காருவோம். அது ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் கூட பேசற. அவ்வளவு நெருக்கமா இருந்தது.

பொதுவா எல்லா இயக்குநரும் பாதுகாப்புக்காகன்னு ஒரே ஷாட்டை அஞ்சாறு தடவ எடுப்பாங்க . ஆனால் இவர் அப்படியெல்லாம் கிடையாது. அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி (ஜோதிகா) கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. சிலம்பம் காட்சில சில நிமிடங்கள் நடிக்கிறதா இருந்தா கூட 6 மாசம் கத்துக்கிறாங்க. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. அவங்ககிட்ட கத்துக்க நிறைய இருக்கு. அவங்களோட நடிச்சது ஆசிர்வாதம்.

எனக்கு அக்கானா ரொம்ப பிடிக்கும்… சின்ன வயசுல அண்ணா ரொம்ப டார்ச்சர் பண்ணுவார். அதுனால அக்கான்னா பிடிக்கும் அதுக்காகவே கடைக்குட்டி சிங்கம் பண்ணினேன். “ஒரு வீட்ல அக்கா இருந்தா ரெண்டு அம்மாவுக்கு சமம்னு அருமையான வசனம் இந்தப்படத்தில வரும்… இந்த வசனம் தந்ததற்கு பாரதிதம்பிக்கு நன்றி.

அதேமாதிரி இந்தக்கதை என்கிட்டே வந்தப்போ, சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். இந்த சினிமா தொழில்ல திறமை தேவை இல்ல ஒழுக்கம் தேவைன்னு அப்பா சொல்வார். சினிமாவில் ஒழுக்கம் என்பதை சத்யாராஜ் மாமா கிட்ட கத்துக்கிட்டேன்.

ஜீத்து சாரோட திட்டமிடல் அவ்வளவு சரியா இருந்தது. ஒரு படத்த 60 நாள்ல முடிக்க முடியும்கிறதெல்லாம் நான் எதிர்பாக்கவே இல்ல. என்னோட முதல் படம் ரெண்டு வருசம், ரெண்டாவது படம் மூணு வருசம், ஒரு பெரிய படம் பெரிய நடிகர்கள் எல்லாத்தையும் சரியா பிளான் பண்ணி 65 நாள்ல இந்தப்படத்த முடிச்சாங்க. பூர்ணிமா என்ன வித்தியாசமா காட்ட ரொம்பவும் கஷ்டப்பட்டாங்க.

கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். படம் பார்த்தேன் மியூஸுக் அவ்வளவு நல்லா வந்திருக்கு. ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். ஒரு நல்ல மியூசிக் டைரக்டர் கிடைக்கிறது நடிகர்க்கு வரம். இந்தப்படம் உருவாக்கியிருக்கற விதம், கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் பிடிக்கும் சூரஜ்ஜுக்கு இது ரொம்ப ஸ்பெஷல். எல்லாருக்குமே இந்தப்படம் ஸ்பெஷல். இந்தப்படம் பெரிய வெற்றி பெறனும்னு வேண்டிக்கிறேன்’ என கூறினார் கார்த்தி.