ஈட்டி – விமர்சனம்

eetti
தஞ்சாவூர் இளைஞன் அதர்வா.. தடகளபோட்டியில் பதக்கங்களை அள்ளிவரும் அவரை உலக அளவில் ஜொலிக்க வைக்க விரும்புகின்றனர் தந்தை ஜெயபிரகாஷும், கோச்சான ஆடுகளம் நரேனும். அதர்வாவின் ஒரே பிரச்சனை உடம்பில் காயம் பட்டால் ரத்தம் உறையாது.

தஞ்சாவூரில் இருந்தபடியே சென்னையில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவுடன் ராங் நம்பர் மூலமாக நட்பாகி காதலாகிறார் அதர்வா. கள்ளநோட்டு அடிக்கும் ஆர்.என்.மனோகரின் சிஷ்யனான ரவுடிக்கு ஸ்ரீதிவ்யாவை திருமணம் செய்ய ஆசை.. ஆனால் அவர்கள் கள்ளநோட்டு கும்பல் என்பதை அறிந்த ஸ்ரீதிவ்யாவின் அண்ணன் திருமுருகன் மனோகரை போலீசில் புகார் கொடுத்து உள்ளே தள்ளுகிறார்.

தேசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள சென்னை வரும் அதர்வா, ஸ்ரீதிவ்யாவை சந்திக்க, ஏதேச்சையாக அவரது அண்ணனை காப்பாற்றப்போக பிரச்சனையும் வாண்டேடாக அதர்வா தோள்மீது ஏறிக்கொள்கிறது. வெளியே வரும் மனோகர் திருமுருகனை போட்டுத் தள்ளிவிட்டு, அதர்வாவுக்கு குறிவைக்கிறார். அதர்வா இந்த கள்ளநோட்டு கும்பலை சமாளித்து போட்டியில் கலந்துகொண்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

ஸ்போர்ட்ஸ் பற்றிய படம் என்றாலும் டைட்டிலுக்கு ஏற்றமாதிரி ஈட்டி எறியும் விளையாட்டை சொல்லாமல் ஈட்டி போல ஷார்ப்பான இளைஞனின் ஆக்ரோஷத்தை காட்ட முயற்சித்திருக்கிறார்கள். அதர்வாவும் கேரக்டருக்கு செம பிட் ஆக இருக்கிறார். சண்டைக்காட்சி, விளையாட்டு பயிற்சி இரண்டிலுமே கடும் உழைப்பு தெரிகிறது.

ஸ்ரீதிவ்யா.. என்ன சொல்வது..? அவர் நடிக்க முயற்சித்தாலும் அழகு பொம்மையான அவரது முகம் அனைத்து காட்சிகளிலும் ஒரே மாதிரியான உணர்ச்சிகளையே வெளிப்படுத்துகிறது. கள்ள நோட்டு ஆர்.என்.ஆர் மனோகரின் உக்கிர நடிப்பு சபாஷ்.

ஆடுகளம் நரேன் இதற்குமுன் கோச்சாக இருந்திருப்பாரோ என்னவோ..? அப்படி ஒரு யதார்த்தம். மகனுக்காக பதறும் அப்பாவாக ஜெயபிரகாஷ் பாந்தம். திருமுருகன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் சபாஷ் பெறுகிறார். நண்பர்கள் டீமில் முருகதாஸ் தேறுகிறார். போலீஸ் அதிகாரியாக செல்வா.. வழக்கம்போல அதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் ஹீரோவுக்கு பொறுப்பை கைமாற்றி க்ளைமாக்ஸில் கைதட்டல் வாங்கி கொடுக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘நான் புடிச்ச மொசக்குட்டியே’ பாடல் ரீங்காரமிடுகிறது. சரவணன் அபிமன்யு கேமரா தடகளத்தில் மட்டுமல்ல, ரணகளத்திலும் காட்சிகளால் மிரட்டுகிறது. புதுமுக இயக்குனர் ரவி அரசு ஒரு ஆக்சன் கமர்ஷ்யல் படத்தை விளையாட்டு பின்னணியில் தர ‘கில்லி’யாக முயற்சித்திருக்கிறார்..

அதர்வா-ஸ்ரீதிவ்யாவின் ராங் நம்பர் காதல் காட்சி ஏற்கனவே நாம் பல படங்களில் பார்த்ததுதான். புதிதாக யோசித்திருக்கலாம். அதர்வாவுக்கு ரத்தம் உறையாது என ஆரம்பத்தில் பயம் காட்டிவிட்டு க்ளைமாக்ஸ் வரை அதற்கான வேலைகொடுக்காமல் விட்டது ஏமாற்றம் அளிக்கிறது. திரைக்கதை அந்த விதமாக பயணித்திருக்கலாம். சுவாரஸ்யம் குறைவு என்றாலும் போரடிக்கவும் இல்லை என்பது மட்டும் கொஞ்சம் ஆறுதல். நடுத்தர நகரத்து இளைஞன் சென்னைக்கு வந்து, போகிறபோக்கில் ரவுடிகளை பிளக்கும் படங்களின் பட்டியலில் 101வது படமாக இடம் பிடிக்கிறது இந்த ஈட்டி.