எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்

Echarikkai movie review

தனது அக்காவை கொன்ற அவரது கணவனை கொலை செய்து விட்டு சின்ன வயதிலேயே ஜெயிலுக்கு போகிறார் கிஷோர். அக்கா பையன் விவேக் ராஜகோபால் ஆதரவில்லாமல் அனாதையாக வளர்கிறார். சில வருடங்கள் கழித்து விடுதலையாகி வெளியே வரும் கிஷோர், அக்கா பையனை தேடிவருகிறார். அவருக்கு ஏதாவது பண்ணி செட்டில் செய்து விட நினைக்கிறார் கிஷோர்..

ஆனால் தந்தையை கொன்றவர் என்பதால் கிஷோருடன் அவ்வளவாக ஒட்டாத விவேக் ராஜகோபால், அரைமனதாக கிஷோர் சொல்லும் கடத்தல் பிளானுக்கு ஒப்புக்கொள்கிறார். ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயகுமார் மகளான வரலட்சுமியை கடத்தி, அவரது தந்தையிடம் எட்டுகோடி ரூபாய் பணம் கேட்கிறார்கள் அவர் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியான சத்யராஜின் உதவியை நாடுகிறார்.

சுவாச குறைபாடு உள்ள ஒரே மகளை விட்டு எங்கேயும் வெளியே போகமுடியாத சத்யராஜ், தனது செல்வாக்கால் வீட்டிலிருந்தபடியே போலீஸ் டிபார்ட்மென்ட் ஆட்களை வைத்து கடத்தியவர்களை கண்டுபிடிக்க முயல்கிறார். கிஷோரும் தன் பங்கிற்கு புத்திசாலித்தனமாக காய் நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் தாங்கள் கடத்தி வந்த வரலட்சுமி தனது மச்சானின் காதலி என கிஷோருக்கு தெரிய வருகிறது. கூடவே தனக்கு பங்கு தராமல் அவர்கள் போடும் தனி திட்டமும் தெரிய வருகிறது.

இந்த நேரத்தில் சத்யராஜின் மகள் சிகிச்சைக்காக கோடிகளில் பணம் தேவைப்பட, அவரின் மூளையும் குயுக்தியாக யோசிக்கிறது. யாருடைய திட்டம் ஜெயித்தது.? அந்தப் பணம் யாருக்கு போய் சேர்ந்தது என்பது க்ளைமாக்ஸ்.

ஆள் கடத்தல் படத்தில் என்னனென்ன அம்சங்கள் இடம்பெறுமோ அத்தனையும் இதில் உள்ளது. கடமை, சென்டிமென்ட், தந்திரம் என கலவையான உணர்வுகளை தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் சத்யராஜ். கிளைமாக்சில் மகள் மூலமாக அந்த பணம் கற்றுத்தரும் பாடத்தை அமைதியாக ஏற்கும் சத்யராஜ் பலருக்கும் ஒரு பாடம்.

படம் முழுதும் வந்தாலும் வரலட்சுமிக்கு ஒரே இடத்தில், அதுவும் கட்டிலில் கட்டிப் போடப்பட்டு கிடக்கும் நிலை என்பதால் அதில் முடிந்த வரை ஸ்கோர் பண்ண முயற்சித்திருக்கிறார். அவரது காதலனாக புதுமுகம் விவேக் ராஜகோபால் பொருத்தமான தேர்வு… நல்ல நடிப்பும் கூட.. கதையின் நாயகன் போல படம் முழுதும் வரும் கிஷோர் அதிகம் பேசாமல் செயலில் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். வரலட்சுமியின் தந்தையாக வரும் ஜெயகுமார் நடிப்பு படு யதார்த்தம். யோகிபாபு வரும் இடங்களில் எல்லாம் நம்மை சிரிக்க வைத்தலும், அவருக்கு வேலை என்னவோ அதிகம் தரப்படவில்லை.

பணம் என வரும்போது மனிதர்கள் தங்களது உண்மை நிறத்தை தமக்கு நெருங்கியவர்களிடமே கூட எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்கிற கருவை வைத்து இயக்குனர் சர்ஜூன் பகடை ஆட்டம் ஆடியிருக்கிறார். ஆனால் இடைவேளைக்குப்பின் பல இடங்களில் அது போங்கு ஆட்டமாக மாறியிருக்கிறது. சத்யராஜ் தான் படத்தை கீழே விழாமல் அவ்வப் போது தாங்கிப்பிடிக்கிறார்.

ஒரு இரண்டு மணி நேரம் உங்களிடம் கைவசம் சும்மா இருக்கிறது என்றால் அதை இந்தப்படம் பார்க்க செலவழிக்கலாம். தப்பில்லை..