பாட்டு கேட்பவர்களுக்கு பணம் தரும் அபிராமி ராமநாதன்..!

abirami ramanathan

திரைப்படங்களை தயாரிப்பதில் புதுமை படைக்க நமது தமிழ் சினிமாவில் பலர் இருக்கிறார்கள்.. ஆனால் படம் பார்க்கும் தியேட்டர்களில் நவீன அம்சங்களை புகுத்தி புதுமைகளை செய்வதில் அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதனை அடித்துக்கொள்ள இன்னொரு ஆள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதுமட்டுமல்ல தற்போது தான் தயாரித்துள்ள படத்தின் இசையை வெளியிடுவதிலும் கூட ஒரு புது டெக்னாலஜியை கொண்டுவந்துள்ளார் ராமநாதன். தற்போது அவர் தயாரித்துள்ள படம் ‘உன்னோடு கா’.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு அபிராமி தியேட்டரில் நடைபெற்றது..

இந்த விழாவில் பேசிய அபிராமி ராமநாதன், “கவிஞர் மதன் கார்க்கி ஆலோசனையின் பேரில் அவரை நிறுவனராக கொண்டு ‘டூபாடூ.காம்’ என்கிற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறோம்.. இந்தப்படத்தின் பாடல்களை சிடிக்களாக வெளியிட்டு விற்கப்போவதில்லை. அதேசமயம் இதை இணையதளத்தில் இருந்தும் டவுன்லோடும் செய்ய முடியாது. மாறாக இந்த டூபாடூ.காமுக்கு சென்று ஒவ்வொருமுறை இந்தப்படத்தின் பாடலை கேட்கும்போதும் உங்களது கணக்கில் சிறிய தொகை ஒன்று ஏறிக்கொண்டே இருக்கும்.. இந்த தொகையை பயன்படுத்தி ஆன்லைனில் ரீசார்ஜ் செய்தல் மற்றும் பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றை செய்துகொள்ள முடியும்” என்றார்.

கேட்பவர்களுக்கு ஒரு பக்கம் பணம் கிடைப்பதோடு, இந்தப்பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் படத்தின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், படத்தின் தயாரிப்பளார் என இந்தப்பாடல் தொடர்புடைய மூவருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தொகை கிடைக்கும்படியாகவும் விளம்பர நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.