பாக்யராஜ் தலைமையில் போட்டியிடும் அணிக்கு ரஜினி அதரவு..?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். ரஜினிகாந்த் எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நீங்கள் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று கூறி ரஜினி வாழ்த்தினார். ஆரம்பத்தில் இருந்து ஐசரி கணேஷ் தான் இந்த கட்டிடம் கட்ட பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்தார். ஆனால் பாதி கட்டிடம் முடிந்த நிலையில், வேலைகள் அப்படியே நின்று போய் விட்டது. கிடப்பில் கிடக்கும் இந்த கட்டிடம் கட்ட இந்த சுவாமி சங்கரதாஸ் அணி முழுவீச்சில் செயல்படும். பாண்டவர் அணியின் மீதான அதிருப்தியால் தான் பலர் அங்கிருந்து வந்து இந்த அணியில் சேர்ந்துள்ளனர். இந்த அணியின் செயல்பாட்டில் அரசியல் இல்லை, அரசியல் இருந்தால் நானே போட்டியிட மாட்டேன் என்றார் கே.பாக்யராஜ்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் ஐசரி கே கணேஷ், துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா, நடிகை குட்டி பத்மினி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் பிரஷாந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பூர்ணிமா பாக்யராஜ், கே ராஜன், ஆர்த்தி கணேஷ், விமல், நிதின் சத்யா, சங்கீதா, காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், ஸ்ரீகாந்த், சிவகாமி, ரஞ்சனி, அயூப்கான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு நடிகர்கள் அருண் பாண்டியன், பாபு கணேஷ், ஷாந்தனு, ஆரி, விஜய் கார்த்திக், வருண், விஜித் ஆகியோர் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.