“இந்த அளவுக்கு அஜித் ரசித்து சிரித்து நான் பார்த்ததில்லை” ; இயக்குனர் சிவா..!

siva

விஸ்வாசம் என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில், அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவாவின் பந்தம் பல ஆண்டுகளாக விசுவாசமாக உள்ளது. உண்மையில், இவர்கள் இருவரும் இணையும்போது, நேர்மறை அதிர்வுகள் உணரப்படும். பாடல்களும் டிரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனாலும், 10ஆம் தேதி படம் ரிலீஸ் என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிகையுடனும் இருக்கிறார்.

விஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது என அவர் கூறும்போது, “நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் ஸ்கிரிப்ட்டை அஜித் சார்க்கு நான் விளக்கினேன். அவருடைய ரியாக்‌ஷன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த ஒரு கதை கேட்கும்போதும் அவர் இந்த அளவுக்கு ரசித்து சிரித்ததை நான் பார்த்ததில்லை. உண்மையில், இது போன்ற ஒரு பொழுதுபோக்கு ஸ்கிரிப்ட் எனக்கு வந்து நீண்ட காலம் ஆகிறது என்று என்னிடம் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த தருணத்திலிருந்து நேர்மறையான உணர்வு தொடர்ந்தது, இப்போது படத்தை வெளியிட நாங்கள் தயாராகி விட்டோம்” என்றார்.

இதுவரையில் அஜித்குமார் அவர்களை குடும்பத்தை (வீரம்), சகோதரியை (வேதாளம்) மற்றும் நாட்டை(விவேகம்) பாதுகாக்கும் ஒரு பாதுகாவலராக தான் இயக்குனர் சிவா சித்தரித்திருக்கிறார். அதுவே விஸ்வாசம் படத்தில் அஜித்தை எப்படி காண்பிப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகரகளிடையே ஒரு ஆர்வத்தை தூண்டியது. “இந்த படம் மதுரை மண்ணின் மைந்தன், எப்போதும் எனர்ஜியுடன் இருக்கும், அதே சமயம் எமோஷனலான ஒருவரை பற்றி பேசுகிறது. படம் முடிந்து வீடு திரும்பும்போது, ‘தூக்குதுரை’ கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டே செல்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், விஸ்வாசம் படத்தில் உணர்வுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை பற்றி சிவா பேசும்போது, “அஜித் சார் உடனான என் முந்தைய திரைப்படங்களை விட விஸ்வாசம் படத்தில் எமோஷன் தாக்கம் அதிகம் என்று நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக, நிறைய மாஸான தருணங்களும், அஜித் சாரின் எனர்ஜியும் உண்டு. இந்த பொங்கல் எங்களுக்கு சிறப்பான பொங்கலாக இருக்கும் என நம்புகிறோம்.

வெகுஜன ரசிக போதனைகளுக்கு அப்பால், நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் மதிக்கும் விதத்தில் பொறுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். விஸ்வாசத்தில் இத்தகைய கூறுகள் பற்றி சிவா கூறும்போது, “அஜித் சார் எப்போதும் தனி ஒருவரின் சுய ஒழுக்கம் சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார். ஒருவேளை நீங்கள் அவரிடமிருந்து கேட்கும் சில விஷயங்கள் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர் அதை ஒருபோதும் கைவிடமாட்டார். அவரும், நயன்தாரா மேடமும் ஒரு பைக் காட்சியில் ஹெல்மெட் அணிந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பைக் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், உடன் பயணிப்பவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நம்புகிறார்.

அஜித்குமாருடன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள், 4 படங்கள் என பயணித்திருக்கும் இயக்குனர் சிவா சில விஷயங்களைப் பற்றி ஆச்சரியப்படுகிறார். அவர் அதுபற்றி கூறும்போது, “நான் அஜித் சாருடன் பணியாற்றிய படங்களிலேயே விஸ்வாசம் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கும். இதுவரை நான் பார்த்திராத பல வித்தியாசமான நடிப்பால் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒவ்வொரு செயலையும் அனுபவித்து செய்தார் என்று மிகவும் தெளிவாக தெரிந்தது. எளிமையான சொற்களில் சொல்ல வேண்டுமானால், ரசிகர்களாக நாம் எப்பொழுதும் “ஸ்டார்” அஜித்தை பார்த்து ரசித்துள்ளோம், பார்வையாளர்கள் இங்கு “நடிகர்” அஜித்தையும் அதனோடு சேர்த்து பார்ப்பார்கள்.

மற்ற நடிகர்கள் பற்றி பேசும்போது, “நயன்தாரா ஒரு நடிப்பு ராட்சஷி, தேர்ந்த நடிப்பை கொடுப்பார். சிறிய நுணுக்கங்களை கூட சரியாக கொடுக்கும் அவரது தன்னிச்சையான திறன் என்னை உற்சாகப்படுத்தியது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெகபதி பாபு சாரின் வில்லன் கதாபாத்திரம் உண்மையில் யதார்த்தத்தை மீறாமல் இருக்கும். அவர் டிரெய்லரில் “என் கதையில நான் ஹீரோ டா” என அவர் கூறுவதை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் பாத்திரம் இருக்கும். அவரது கதாபாத்திரம் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு கதாபாத்திரம் போன்றது தான். யதார்த்தத்தை மீறாமல் இருக்கும். விஸ்வாசம் படத்தில் விவேக் சார், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், கோவை சரளா மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்திருப்பது எங்களுக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.

எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி.இமான், சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் மிலன் என எனக்கு ஆதரவாக இருந்த ஒட்டுமொத்த அணிக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். அவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கினர். சவுண்ட் உதயகுமார், சவுண்ட் டிசைனர் ஹரி, வி.எஃப்.எக்ஸ் செல்வம் மற்றும் துணை எழுத்தாளர் ஆதி நாராயண ராவ் ஆகியோரின் பங்களிப்பும் மிக அதிகம்.

தயாரிப்பாளர்கள் T.G. தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் பற்றி சிவா கூறும்போது, “தியாகராஜன் சார் ஒரு நல்ல மனிதர், அவரது ஆதரவு மிகப்பெரியது. படப்பிடிப்பு நினைத்த வகையில் நடக்க, தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். அவரது மகன் அர்ஜுன் மிகவும் ஆதரவாக இருந்தார், படத்தை குறித்த நேரத்தில் முடிக்க உதவியாக இருந்தார். உண்மையில், சத்யஜோதி நிறுவனத்துடன் எனது உறவுமுறை தலைமுறைக்கு அப்பால் செல்கிறது. ஆம், எங்கள் தாத்தா அவர்களுடன் சேர்ந்து வேலை செய்தார். இன்று மூன்றாம் தலைமுறையில் நாங்கள் இணைந்து பணி புரிந்திருக்கிறோம்.