இயக்குனர் ராம் மீது பேரன்பை வெளிப்படுத்திய இயக்குனர் குடும்பம்..!

Peranbu Audio Launch

தரமணி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ளது பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. மெகாஸ்டார் மம்முட்டி, அஞ்சலி மற்றும் ‘தங்க மீன்கள்’ சாதனா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், ’பெர்லீன்’ மற்றும் ’வெனீஸ்’உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பல பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இந்தநிலையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ’பேரன்பு’ பட டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் கேரளாவில் இருந்து மம்முட்டியும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் இந்த விழாவில் இயக்குனர் ராமுக்கு உறுதுணையாக நாங்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என காட்டும் விதமாக இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, மிஷ்கின், கரு.பழனியப்பன், ஏ.எல்.விஜய், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல இயக்குனர்கள் மேடையை அலங்கரித்து ஆச்சரியப்படுத்தினர்.

இந்த விழாவில் பேசிய மம்முட்டி, படத்தை பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை.. காரணம் இந்தப்படத்தை பார்த்தவர்கள் படத்தை பற்றி மற்றவர்களிடம் பேசுவார்கள்.. அப்படித்தான் இந்தப்படம் ஓடும் என ரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பேரன்பு படத்திற்கான இசைவெளியீட்டு விழா என்பதை விட இயக்குனர் ராமின் மீது மற்ற இயக்குனர்கள் கொண்டுள்ள பேரன்பை காட்டும் விழாவாக இந்த நிகழ்வு அமைந்தது என கூறினால் பொருத்தமாக இருக்கும்.