புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..!

perarasu

DK பிக்சர்ஸ் சார்பில் ஜெ.தனலட்சுமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ கதாநாயகனாக கிரிஷிக், கதாநாயகிகளாக மேகாஸ்ரீ மற்றும் மணாலி ரத்தோட் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ்,பவர்ஸ்டார், அபினவ், தீப்பெட்டி கணேசன், கே.கே.சேஷூ, கிரேன்மனோகர் மற்றும் ஜோதிலட்சுமி, ஷகீலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ந.கிருஷ்ணகுமார் இந்தப்படத்தை இயகியுள்ளார். வல்லவன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, அய்யனார் வீதி பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ், பிஆர்ஓ யூனியன் தலைவர் விஜயமுரளி, சர்வதேச மனித உரிமை கழக செயலாளரும் மற்றும் சட்ட ஆலோசகருமான தின உரிமை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் டாக்டர் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, “தயாரிப்பாளர்கள் முன்பெல்லாம் இயக்குனர்கள், நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என ஒவ்வொருவருக்கும் பயந்த காலம் போய் இன்று யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. கோடிகளில் முதலீடு செய்து படம் எடுப்பவர்களை யாரோ ஒருவர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள்.. அதேசமயம் தனிநபர் விமர்சனம், ஒருமையில் விமர்சிப்பதற்கு உங்களுக்கு யாருக்கு உரிமை இல்லை. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. இது தொடர்ந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்..

அதேபோல தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.. உங்களை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை தேடி ஓடாமல், உங்கள் நிலையறிந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களை தேடிச்சென்று ஊக்குவியுங்கள் அப்போதுதான் சினிமா செழிக்கும். தயாரிப்பாளரும் லாபம் அடைவார்கள்.” என பேசினார்.