“2௦ வருட கேள்விக்கு பதில் தான் ‘வேலைக்காரன்’ படம்” ; மோகன்ராஜா..!

mohanraja

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன்ராஜா.

“நான் தனி ஆள் அல்ல.. நிறைய பேரிடம் ஆலோசித்து தான் படங்களை எடுத்து வருகிறேன். 14 உதவி இயக்குனர்கள், 2 ஆராய்ச்சி குழுக்கள், எழுத்தாளர்கள் சுபா ஆகியோருடன் நிறைய வவாதித்து அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டு தான் இரண்டு படங்களையும் உருவாக்கியிருக்கிறேன். இந்த படத்தில் சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டிருக்கிறேன். 20 வருடங்களாக என் மனதுக்குள் இருந்த கேள்விகளை கேட்க, தகுதியை வளர்த்துக் கொண்டேன். தனி ஒருவன் ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தில் மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து கேட்டிருக்கிறேன்.

பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். சினிமா தரும் எண்டர்டெயின்மெண்டை விட நியூஸ் சேனல்கள் தரும் சமூக பிரச்சினைகள், அரசியல் அவலங்கள் போன்ற எண்டர்டெயின்மெண்ட் தான் இப்போது அதிகம். என்னை நம்பி கொடுத்த இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வேலைக்காரர்கள், முதலாளித்துவம் பற்றிய குறைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்த சமூகத்தில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருகிறேன். கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்து விட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்த படத்துக்கு பிறகு அது நடக்கும். சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாக மட்டும் தான் சொல்ல வேண்டும்” என நினைக்கிறேன் என்றார்.