மகத்தான இயக்குனர் மகேந்திரன் காலமானார்

mahendran (1)

தமிழ் சினிமாவின் முகங்களில் ஒருவராக விளங்கியவர் இயக்குனர் மகேந்திரன்.. இதோ இன்று நம்மைவிட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருக்கு வயது 79. எத்தனை படங்கள் எடுத்தோம் என்பதைவிட நான் எடுத்த படங்கள் எத்தனை வருடம் பேசப்படுகின்றன என்கிற விதமாக மிக சில படங்களை மட்டுமே இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன் சொல்லப்போனால் கடந்த 40 வருடங்களில் வெறும் 12 திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் நான்கு தலைமுறையாக சினிமாவுக்கு உள்ளேயும் சினிமாவுக்கு வெளியேயும் பேசப்படுகின்ற ஒரு பெயர் தான் மகேந்திரன். சினிமா உள்ள காலம் வரை இனியும் பேசப்படுவார்.

1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கை கொடுக்கும் கை’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். 2006-ம் ஆண்டு வெளியான ‘சாசனம்’ என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த் சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து ‘நிமிர்’, ‘Mr. சந்திரமெளலி’, ‘சீதக்காதி’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில், அருள்நிதியுடன் நடித்து வந்தார்.

இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. வயது அதிகமாகிவிட்டதால், டயாலிசிஸ் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

இயக்குநர் மகேந்திரனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணியளவில் அவரது நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.