“எமதர்மன் மேக்கப் போட்டதுமே திமிரு வந்துவிட்டது” ; யோகிபாபு

tharmaprabhu

நகைச்சுவை நடிகர் யோகிபாபு முதன் முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தர்மபிரபு.. அவரது நண்பர் இயக்குனர் முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.. இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது..

இதில் இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, நானும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போது நாங்கள் இருவரும் இந்த கதையைப் பற்றி பேசினோம். யாராவது தவறு செய்தால் தண்டனை கொடுப்பது எமதர்மன் தான். அதை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுத்திருக்கிறோம். ராதாரவி யோகிபாபுவிற்கு தந்தையாக நடித்திருப்பார். அவரைத் தவிர வேறு யாரும் இந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கமாட்டார்கள்.

தயாரிப்பாளரிடம் இக்கதையைக் கூறி, தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றேன். கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்றார். கலை இயக்குநர் நான் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக செட் அமைத்துக் கொடுத்தார். அதுதான் படத்திற்கு முக்கியம். அதேபோல், ஆடை வடிவமைப்பு முருகன் சிறப்பாக செய்துக் கொடுத்தார். ‘கன்னிராசி’ படத்தை 45 நாட்களில் இயக்கி முடித்தேன். இசைக்கு ‘கன்னிராசி’ படத்திற்கே ஜஸ்டினை அழைக்க நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அவரை அழைக்கமுடியவில்லை. இந்த படத்தில் ஜஸ்டின் இசையமைத்ததில் மகிழ்ச்சி. யோகிபாபுவை பற்றி நான் பேசிக் கொண்டே போகலாம். அவரை நடிகனாகும் முன்பிருந்தே தெரியும். ஒரு காலகட்டத்தில் அவரை சம்பாதித்து வரும் தொகையில் தான் நாங்கள் சாப்பிடுவோம். அவர் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது “‘தர்ம பிரபு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்ததும் இப்படத்தை இழந்துவிட்டோம் என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கும். யோகிபாபுவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இயக்குநர் முத்துகுமாரின் முகபாவனை நன்றாக இருக்கிறது. அவரும் நடிக்கலாம். இதுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நகைச்சுவை நடிகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதை புரிந்துக் கொண்டு இனிமேல் வருபவர்கள் அந்த தவறை சரிசெய்துக் கொள்ள வேண்டும்.

கதையின் நாயகன் யோகிபாபு பேசும்போது, “இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘கூர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்தில் தனியாளாக விளையாடுகிறேன் என்று கூறினார்கள்.. யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

முதலில் மேக் அப் போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா தான் கூறினார், இந்த கெட் அப் போட்டாலே திமிர் தானாக வந்துவிடும். அதேபோல் தான் நானும் உணர்ந்தேன். சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை’, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும். விரைவில் நானும், ரேகாவும் இணைந்து நடிப்போம்.

நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள்” என்றார்.