தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

காதலித்து திருமணம் செய்துகொள்ள நிறைய வாய்ப்பு இருந்தும் ராசி, நட்சத்திரம் பார்த்து அந்த வாய்ப்பை எல்லாம் வீணாக்குகிறார் கார் கம்பெனியில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண். காதலி ரெபா மோனிகா உடன் ஒரு சிறிய மனஸ்தாபத்தால் காதல் முறிவு ஏற்பட, பின்னாளில் அவரது திருமணத்திற்கே சென்று வாழ்த்து செல்கிறார் ஹரிஷ் கல்யாண்.. சென்ற இடத்தில் ரெபாவின் தோழியான திகங்கனா சூரியவன்சி மீது எதிர்பாராமல் இன்னொரு காதல் ஏற்பட அதிலும் தான் தேடிக்கொண்டிருக்கும் கன்னிராசி பெண் என தெரியவர மீண்டும் லவ் மூடுக்கு வருகிறார் ஹரிஷ் கல்யாண்..

ஆனால் திகங்கனாவோ விண்வெளிப்பயணமாக செவ்வாய் கிரகத்திற்கு சென்று மீண்டும் பூமி திரும்பாமல் அங்கேயே செட்டில் ஆவதை லட்சியமாக வைத்துக்கொண்டிருப்பவர்.. அதனால் காதலையும் காமத்தையும் போகிற போக்கில் ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்ல நினைக்கிற அவரை நினைத்து, அவரைப் பிரிய முடியாமல் பைத்தியம் பிடிக்கிற நிலைக்குச் செல்கிறார் ஹரிஷ் கல்யாண்.. காதல் கல்யாணத்தில் கைகூடியதா இல்லை..? தனது லட்சிய பயணத்துக்காக காதலை தூக்கி எறிந்தாரா நாயகி..? நாயகனின் ராசி பார்க்கும் பைத்தியத்திற்கு தக்க பலன் கிடைத்ததா என்பது கிளைமாக்ஸ்.

இந்த காலத்திலும் ராசி பலன் பார்ப்பது தவிர்க்க முடியாது என்பதும் இளைஞர்கள் கூட ராசிபலன் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும் ஓரளவு தெரிந்த விஷயம்தான்.. என்றாலும் ராசி மட்டுமே வாழ்க்கை என்று நம்பும் ஒரு மனிதராக ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தை நம்மால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதேசமயம் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நியாயமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.. இதற்கு முந்தைய அவரது இரண்டு படங்களிலும் பார்த்த இதேபோன்ற நடிப்பு தான் என்றாலும் இந்த கதைக்கு அதுதான் தேவைப்படுகிறது என்பதால் அதை நாம் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொள்வோம்..

கதாநாயகியாக திகங்கனா சூரியவன்ஷி.. பார்ப்பதற்கு ஓரளவுக்கு தமன்னா சாயலில் இருக்கும் இவருக்கு, தமன்னாவிற்கு டப்பிங் பேசியவரே பேசி இருப்பதாலோ என்னவோ படம் முழுவதும் தமன்னாவை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.. அதுதான் இவருக்கு பிளஸ் மைனஸ் ரெண்டுமே.. மிகத் துணிச்சலாக கதாபாத்திரம் என்றாலும் சற்றே குழப்பமான கதாபாத்திரம் என்று கூட சொல்லலாம்..

இன்னொரு நாயகியாக ரெபா மோனிகா. இன்றைய நவீன உலகத்தில் காதலையும் நட்பையும் பிரித்துப் பார்த்த தெரிந்த ஒரு அருமையான கதாபாத்திரம்.. நாயகனின் கூடவே தாய்மாமனாக வரும் முனீஸ்காந்த் காமெடி பேட்டில் அடிக்கும் ஒருசில பந்துகள் மட்டும் நகைச்சுவை ரன்களை எடுக்கின்றன. ரசிகர்களுக்கு போனஸாக பிக்பாஸ் ரைசா வில்சன்.. கிளைமாக்ஸில் மட்டும் வந்து போகிறார்.. ஒரே நாள் கால்ஷீட் கொடுத்து மொத்த படத்திலும் வரும்விதமாக அவ்வப்போது கதையை நகர்த்திச் செல்லும் நபராக வரும் யோகிபாபு மற்றவர்களையும் கலாய்த்து கால்ஷீட் பற்றாக்குறை காரணமாக தான் நடித்ததாக கூறி தன்னையும் கலாய்த்து கொள்கிறார்.. சார்லி, ரேணுகா இருவரும் பாந்தமான பங்களிப்பை தந்துள்ளனர்.

ராசிபலன் ஜாதகம் ஜோதிடத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் எதார்த்த உலகத்தில் எதையெல்லாம் இழக்க நேரிடும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி. இளைஞர்களுக்கு இந்தப்படம் நிச்சயமாக பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை…