தனுஷ்-சினேகா நடிக்கும் படம் குற்றாலத்தில் துவங்கியது

dhasnush-sneha film

திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், நல்ல தரமான குடும்ப பொழுதுபோக்கு படங்களை தருவதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘விஸ்வாசம்’ என்ற பெருமைக்குரிய தயாரிப்பின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சுவைத்தது சத்யஜோதி ஃபிலிம்ஸ்.

அடுத்து தனுஷ் நாயகனாக நடிக்கும் “தயாரிப்பு எண் 34″ என்ற தற்காலிக தலைப்பில் அடுத்த படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் படத்தின் முக்கிய காட்சிகள் படம் பிடிக்கப்பட உள்ளன. கொடி படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இணையும் இரண்டாவது படம் இது.

இயக்குனர் துரை செந்தில்குமார் கூறும்போது, “கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷ் சார் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் போன்ற ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எந்த ஒரு படத்தையும் மிகச்சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தும் சத்யஜோதி நிறுவனத்தின் தனித்துவம் பலருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. மிகச்சிறந்த படத்தை வழங்கும் பொறுப்பு என் தோள்களில் உள்ளது என்பதை நான் உணர்கிறேன், அதை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன்” என்றார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, இரட்டை இளம் இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இசையமைக்கிறார்கள். அடுத்து தனுஷ் மற்றும் ராட்சசன் புகழ் ராம்குமார் இணையும் படத்தையும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.