தாதா 87 – விமர்சனம்

Dhadha 87 review

87 வயதான சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் இது. சொல்லப்போனால் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான சத்யாவின் இரண்டாம் பாகம் போலவே இந்த படத்தை எடுத்துள்ளார்கள். அதே சமயம் இந்த படத்தின் இடையே இன்னொரு காதல் கதையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என ஏரியா தாதாவாக இருக்கிறார் சாருஹாசன். இளம் வயதில் அவருடன் காதல் வயப்பட்டு பிரிந்து திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறார் சரோஜா பாட்டி. ஒரு கட்டத்தில் அந்த பகுதியில் இருக்கும் ஜனகராஜ் மகள் ஸ்ரீ பல்லவியை, அந்த பகுதியை சேர்ந்த ஆனந்த் பாண்டி தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுப்பதால் அவரை அழைத்து நாலு தட்டு தட்டி அனுப்புகிறார் சாருஹாசன்.

அதன் பிறகான படம் ஆனந்த் பாண்டி-ஸ்ரீ பல்லவி இவர்களை மையப்படுத்தியே பயணிக்கிறது. லவ் பண்ணாவிட்டால் ஆசிட் அடிப்பேன் என மிரட்டிய ஆனந்த் பாண்டி, ஒரு கட்டத்தில் அவரது காதலை ஏற்றுக்கொண்டு ஸ்ரீ பல்லவி சம்மதம் சொன்னவுடன் ‘ஆளைவிடும்மா சாமி’ எனக்கு தெறித்து ஒடுகிறார் ஆனந்த் பாண்டி.

ஆனால் ஸ்ரீ பல்லவி ஆனந்த் பாண்டியை விடுவதாக இல்லை.. ஆனந்த் பாண்டி ஏன் தெறித்து ஓடினார், இருவரின் காதல் என்ன ஆயிற்று என்பதற்கு மீதி படம் விடை சொல்கிறது.

இந்தப்படத்தின் முதல் பாதி சாருஹாசன், அவரது கேங், அடிதடி என பயணிக்கிறது. இன்னொரு பக்கம் ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி காதல் சேசிங் வழக்கமான காதல் கதையாக என்னடா இது என போரடிக்க வைக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு இந்த காதல் அப்படியே யூ டர்ன் எடுத்து நம்மை எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காதல் கதை சொல்லப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இப்படி ஒரு அழகான கதையை வைத்துக்கொண்டு எதற்காக சாருஹாசன், அடிதடி, தாதா என முதல் பாதியை நகர்த்தினார்களோ தெரியவில்லை. இந்த விஷயத்தை இன்னும் அழகாக காட்சிப்படுத்தி இருந்தால், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இது இடம் பிடித்திருக்கும்.

கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீ பல்லவியின் நடிப்பை மட்டுமல்ல, அவரது துணிச்சலையும் பாராட்டியே ஆகவேண்டும். காதலில் விழுவதற்கு முன்பு அவரது நடவடிக்கையும், ஒரு கட்டத்தில் காதலில் விழுந்த பின்பு அதை மறக்க முடியாமல் தவிக்கும் தவிப்பும் என தமிழ் சினிமாவிற்கு ஸ்ரீ பல்லவி கதாபாத்திரம் ரொம்பவே புதுசு. இன்னும் சொல்லப்போனால் இடைவேளைக்கு முன்பு வரை ஏதோ ஒரு சாதாரண கதாநாயகி போல காட்சியளிக்கும் அவர் இடைவேளைக்கு பின்பு நம் மனம் முழுவதையும் தனது இயல்பான நடிப்பால் ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

ஆனந்த் பாண்டியன் நடிப்பில் நிறைய செயற்கைத்தனம் இருந்தாலும் இடைவேளைக்குப்பின் போகப்போக அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். இந்த வயதிலும் இப்படி ஒரு கெத்தான ரோலில் எந்தவித தளர்வும் சோர்வும் இல்லாமல் குரல் உடையாமல் பேசி நடித்ததற்காக சாருஹாசனையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும். அவரது ஜோடியாக வரும் சரோஜா பாட்டியும் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு திருநங்கையின் தந்தை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஜனகராஜ் கேரக்டர். அந்த கேரக்டருக்கு அவர் அற்புதமாக உயிர் கொடுத்துள்ளார்.

நாயகனின் தந்தையாக வரும் மாரிமுத்து ஒரு பக்கம் யதார்த்த தந்தையாக காட்சியளித்தாலும், இன்னொரு பக்கம் ஓவர் ஆக்டிங் மேலும் சொதப்பவும் தவறவில்லை.. நாயகனின் நண்பனாக வரும் எரும சாணி விஜய் ஓரளவு கவர்கிறார்.

இந்த படத்தில் உள்ள சில குறைபாடுகளை பொறுத்துக்கொண்டு பார்த்தால் இந்த படம் உங்களுக்கு அற்புதமான உணர்வுகளை கடத்தும் என்பது சந்தேகமே இல்லை. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டிய இந்தப்படத்தை இப்படி எடுத்துவிட்டாரே என்று மட்டுமே இயக்குனர் விஜய் ஸ்ரீ மீது வருத்தப்பட முடிகிறது. மற்றபடி ஒரு புதிய கதை கருவை படமாக்க துணிந்ததற்காக அவரை தாராளமாக பாராட்டியே ஆக வேண்டும்.