“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா. இன்றளவும் கொம்பன் முத்தையா என அறியப்படும் இவர் தற்போது கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள தேவராட்டம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் பேசிய இயக்குனர் முத்தையா, “பொள்ளாச்சி சம்பவங்கள் போல பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று நம் மனதை வேதனைப்படுத்தி வருகிறது. இதை தடுக்க முடியாதா..? இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எதுவுமே செய்ய முடியாதா என்ற ஆதங்கம் நமக்கு ஏற்படுகிறது. இதற்கெல்லாம் வடிகாலாகத்தான் எனது படங்களை நான் இயக்கி வருகிறேன்.. தேவராட்டம் அப்படி ஒரு படம் தான்..

இது சாதிய பெருமையைப் பேசும் படம் அல்ல.. தேவராட்டம் என்பது ஒரு கலை.. இந்தப்படத்தில் குடும்ப உறவின் மேன்மைகளை, குறிப்பாக அக்கா தம்பியின் உறவை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறேன். என்னுடைய மக்களை நான் வாழ்ந்த இடத்தில் உள்ள கலாசாரத்தை மட்டுமே என்னால் சரியாக சொல்ல முடியும் என்பதால் தென்மாவட்ட கதைகளையே தொடர்ந்து படமாக்கி வருகிறேன்.

இனி வரும் நாட்களில் நகர பின்னணியிலான கதைகளையும் இயக்க முயற்சி செய்வேன்.. அப்படி இருந்தாலும் அதிலும் குடும்ப உறவின் மேன்மைகளை மட்டுமே அதுவும் கமர்ஷியலாக சொல்ல முயற்சிப்பேன்” என கூறினார் முத்தையா.

இந்த படம் வரும் மே-1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.