டார்லிங் – விமர்சனம்

 

சீரியஸாக ஒரு பேய்ப்படம் பார்ப்பதை விட, கொஞ்சம் பயம், நிறைய காமெடி என ஜாலியாக வரும் பேய்ப்படங்களை பார்ப்பதில் உள்ள சந்தோஷமே தனி.. இந்த ‘டார்லிங்’கும் அப்படி ஒரு அனுபவத்தை தான் ரசிகர்களுக்கு தருகிறது.

காதலி தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்ய நினைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால் அவருக்கே தெரியாமல், அவரை கல்லூரி காலத்தில் இருந்தே ஒருதலையாக காதலிக்கும் நிக்கி கல்ராணி, தங்கள் இருவருக்கும் நண்பனான பால சரவணனின் உதவியுடன் தாங்களும், தங்கள் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாக ட்ராமா ஆடுகிறார்..

மூவரின் தற்கொலை செய்ய திட்டமிட்டு, ஈ.சி.ஆர் சாலையில் உள்ள மர்ம பங்களாவுக்கு செல்கிறார்கள்.. போகும் வழியில் இதேமாதிரி தற்கொலை எண்ணத்துடன் இருக்கும் கருணாஸும் உடன் சேர்ந்துகொள்கிறார். தற்கொலை எண்ணத்துடன் சென்ற ஜி.வி.பிரகாஷுக்கு நிக்கியின் காதல் தெரியவர, மனம் மாறி உயிர்வாழும் ஆசை ஏற்படுகிறது. ஆனால் அங்கே இருக்கும் பேய் இவர்கள் எண்ணம் ஈடேற விட்டதா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும்  ஜி.வி.பிரகாஷ் தனது முதல் அடியை கவனமாகவே வைத்திருக்கிறார். தாடியுடன், அமைதியான பேச்சு, சிம்பிள் ரொமான்ஸ், அளந்தெடுத்த மாதிரியான நகைச்சுவை என கேரக்டருக்குள் புகுந்துகொள்வதால், படம் முழுவதும் நமக்கு ஜி.வி.பிரகாஷ் மறைந்து கதிர் கதாபாத்திரம் தான் தெரிகிறது. அதுதான் அவருக்கு பிளஸ் பாயின்ட்டாகவும் அமைந்திருக்கிறது.

புதுவீட்டிற்கு பெயின்ட் அடித்ததுபோல பளிச்சென படம் முழுவதும் அழகுராணியாக வலம் வருகிறார் அறிமுக நாயகியான நிக்கி கல்ராணி. பேயாக மாறும் காட்சிகளிலும் மாடுலேஷனை மாற்றி நம்மை பயமுறுத்துகிறார். துரோகம் செய்யும் காதலியாக வரும் சிருஷ்டிக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, வாழ்வா சாவா என்கிற ரேஞ்சில் நகைச்சுவையில் இறங்கி சிக்ஸர் அடித்திருக்கிறார் கருணாஸ். யூத்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக பின்னியிருக்கிறார். கூடவே பாலசரவணனும் தனது டைமிங் ‘பஞ்ச்’களை அவ்வப்போது எடுத்து வீச களைகட்டுகிறது.

கோஸ்ட் கோபால் வர்மா என பெயர் உச்சரிக்கப்பட்டவுடனே தியேட்டரில் எழும் விசிலும் கைதட்டலும் அந்த கேரக்டரில் நடித்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் ரசிகர் செல்வாக்கை பறைசாற்றுகிறது.. வீடியோ சாட்டிங்கில் பேய் ஓட்டுவதாகட்டும், பேயிடம் ‘ஐ ஆம் வெய்ட்டிங்’ என கட்டை விரலை உயர்த்துவதாகட்டும்… அவர் வரும் ஐந்து நிமிடமும் அட்டகாசம் தான் போங்கள்..

திகிலுக்கு உத்தரவாதம் கொடுக்கும் ஜி.வி.பிரகாஷின் இசை பாடல்களை ஜஸ்ட் லைக் தட் கடந்துவிடுகிறது. ஒரே பங்களாவிற்குள் சுற்றி சுற்றி வந்தாலும் ஒவ்வொரு நேரத்திற்கும் திகில் படத்திற்கு ஏற்றமாதிரி மூட் மாற்றுகிறது கிருஷ்ணன் வசந்தின் கேமரா..

நான் ஸ்டாப் காமெடி த்ரில்லராக படத்தை இயக்கியுள்ள சாம் ஆண்டன் ரசிகர்களின் இடைவிடாத கைதட்டலால் புண்ணியம் கட்டிக்கொள்கிறார். பேய்ப்படங்களுக்கே உரிய சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் கூட காமெடி படம் என்பதால் அவற்றை தள்ளுபடி செய்துவிடலாம். படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீனும் வெளியிட்ட ட்ரீம் பேக்டரியும் கூடவே கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஜி.வி.பிரகாஷும் இந்த வருடத்தில் தங்களது முதல் கணக்கை, வெற்றிகரமாகவே துவக்கியிருக்கிறார்கள்.