பிக்கப் ஆகிறது டார்லிங்..!

 

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டார்லிங்’, ஒருபக்கம் ‘ஐ’.. இன்னொரு பக்கம் ‘ஆம்பள’ என என இரண்டு பெரிய படங்களுடன் சேர்ந்து வெளியானாலும் ரசிகர்கள் அனைவரின் மனங்கவர்ந்த ‘டார்லிங்’காக ஆகிவிட்டது. நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தரும் படம் என வாய்மொழியாக செய்தி பரவ, இப்போது இன்னும் 25 தியேட்டர்களில் கூடுதலாக திரையிட்டு இருக்கிறார்கள்.

இது தெலுங்கு ரீமேக் தான் என்றாலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தமிழில் இதே போன்ற கதையம்சத்துடன் ஒரு படம் வெளியானது ரசிகர்கள் பலருக்கு ஞாபகமிருக்கலாம். ஆனால் அந்தப்படத்தின் மேக்கிங் மற்றும் பேய்க்கு சொல்லப்பட்ட வலுவில்லாத பிளாஸ்பேக்கால் ஒருவாரம் கூட தியேட்டர்களில் தாக்கு பிடிக்க முடியவில்லை.

ஆனால் இந்த ‘டார்லிங்’கில் பேய்க்கு அழுத்தமாக சொல்லப்பட்டிருந்த பிளாஸ்பேக், க்ளைமாக்ஸில் நாம் பதைபதைக்கும்போது திடீரென வரும் ட்விஸ்ட், ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, பாலசரவணன், கருணாஸ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரின் மிகத்தெளிவான காமெடி கலந்த நடிப்பு எல்லாம் சேர்ந்து தியேட்டரில் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை கைதட்டலை வரவைப்பது தான் ‘டார்லிங்’கிற்கான தியேட்டர்களை அதிகப்படுத்தியுள்ளது.