டகால்டி – விமர்சனம்

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது. இந்த இடைவெளியை சரியாக நிரப்பியிருக்கிறாரா சந்தானம் ? பார்க்கலாம்.

மும்பையில் வசிக்கும் சந்தானம் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்பவர். அப்படி ஒருமுறை ராதாரவியை ஏமாற்றி மாற்றிக் கொள்கிறார் சந்தானம். மும்பையிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் ஒரு பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையை ராதாரவியிடம் ஒப்படைக்க, அதை தெரிந்து கொண்ட சந்தானம் தனக்கு தெரிந்த பெண் தான் அவர் என கூறி தான் அவரை கண்டுபிடித்து தருவதாக சொல்லி அப்போதைக்கு பிரச்சனையிலிருந்து தப்பிக்கிறார்.

அந்தப் பெண் தமிழ்நாட்டில் இருப்பவர் என தெரியவர ஒருவழியாக அவரை கண்டுபிடித்து நைச்சியமாக பேசி மும்பை அழைத்து செல்கிறார் ராதாரவியிடம் ஒப்படைக்கப்பட்டது போல இன்னும் சில ரவுடி குரூப்புகளிடமும் அந்த பெண்ணை தேடும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டதால், வழியில் அந்த பெண்ணை தனித்தனியாக இரண்டு குரூப்புகள் கடத்துகின்றன.

ஒருவழியாக அவர்களிடமிருந்து அந்த பெண்ணை மீட்டு மும்பைக்கு அழைத்து செல்கிறார் சந்தானம். அங்கு ராதாரவியிடம் ஒப்படைத்தாரா..? மும்பையில் இருக்கும் அவ்வளவு பெரிய கோடீஸ்வரன் எதற்காக தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் இருக்கும் பெண்ணை தேடச் சொல்கிறார் என்பதற்கான காரணங்கள் எல்லாம் மீதி படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சந்தானத்திடம் இருக்கும் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் அவரது காமெடியும் டைமிங் டயலாக்குகளும் தான். ஆனால் ஹீரோவான பிறகு வந்த படங்களில் அதுவும் குறிப்பாக இந்த படத்தில் அது ரொம்பவே மிஸ் ஆகிறது. ஹீரோ என்பதற்காகவே தனது பிளஸ் பாயிண்டுகள் பலவற்றை விட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக நகர்த்தி இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இது ஒருபக்கம் இருக்க கதையும் கூட அரதப்பழசான கதை என்பதால் சந்தானத்திற்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தில்லுக்குதுட்டு, இனிமே இப்படித்தான் என கதையம்சம் உள்ள படங்களில் அழகாக வெற்றி பெற்று வந்த சந்தானம் இன்னும் கதை தேர்வில் கவனம் செலுத்தவேண்டும்.

கதாநாயகியாக ரித்திகா சென். படம் முழுவதும் இவர் மீது தான் கதை பயணிக்கிறது என்பதுடன் இவர் துறுதுறு பெண்ணாக வருகிறார் என்பதும் ஆறுதல். அதேசமயம் ஒரு இயக்குனராக துடிக்கும் கதாநாயகி இவ்வளவு அம்மாஞ்சியாகவா இருப்பார். கதாபாத்திர வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

காமெடிக்கு யோகிபாபு.. சந்தானம் யோகிபாபுவை கலாய்ப்பதும் பதிலுக்கு அவர் சந்தானத்தை அவர் வாருவதும் என சில காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. இருந்தாலும் ஹீரோவுக்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ யோகிபாபுவின் முக்கியத்தை முக்கால்வாசி குறைத்து விட்டார்கள். ஆனாலும் கிளைமாக்ஸில் மீண்டும் அதை ஓரளவு ஈடுகட்டி விடுகிறார்கள் சந்தானமும் யோகிபாபுவும். இது தவிர மும்பை காமெடி தாதாவாக ராதாரவி, லேடீஸ் புரோக்கராக பிரம்மானந்தம் ஆகியோருடன் தனக்கு வேண்டிய பெண்களை வித்தியாசமான முறையில் தேடும் வில்லனாக தருண் அரோரா என மற்றவர்களும் கொடுத்த வேலையை ஓரளவுக்கு செய்திருக்கிறார்கள்.

காமெடி காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் சந்தானம் கொஞ்சம் அதிரடி காட்டி இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது அதேசமயம் காமெடியா, ஆக்சனா எந்தப்பக்கம் சாயலாம் என்கிற குழப்பத்தில் அவர் இருக்கிறார் என்பதும் இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த், சந்தானம், யோகி பாபு என இரண்டு மாஸ் காமெடியன்களை வைத்துக் கொண்டு உள்ளத்தை அள்ளித்தா ரேஞ்சில் ஒரு காட்டு காட்டி இருக்கலாம். ஆனால் என்னிடம் உள்ளதை அள்ளி தருகிறேன் என அளந்து கொடுத்து ஏமாற்றம் தந்திருக்கிறார்.. ஒருமுறை பார்த்து சிரித்துவிட்டு வர இந்த படம் ஓகே தான்…