நடிகரும் பத்திரிகையாளருமான சோ காலமானார்..!

cho-ramaswami-4

மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா காலமான மிகவும் வருந்தத்தக்க நிகழ்வின் ஈரம் காய்வதற்குள் நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான சோ.ராமசாமி இன்று அதிகாலை காலமான சம்பவம் பொதுமக்களையும் ரசிகர்களையும் மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 82 வயதான சோ தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பிரதமர் மோடி வரை அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர்.

முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வழிகாட்டியாகவும் அவரது நலம் விரும்பியாகவும் திகழ்ந்தவர் சோ.. 1963ல் ‘பார் மகளே’ பார் என்கிற படத்தில் தமிழ்சினிமாவில் அறிமுகமான சோ சுமார் 190 படங்களில் நடித்துள்ளார். ‘முகமது பின் துக்ளக்’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். மேடை நாடகங்களை நடத்துவது இவரது உயிர் மூச்சு என்றே சொல்லலாம்.

எம்.ஜி.ஆரின் பல படங்களில் அவரது ஆஸ்தான நகைச்சுவை நடிகராக நடித்தார். அதன் பிந்தைய காலகட்டங்களில் ரஜினியின் நட்புக்கு பாத்திரமாகி அவரது படங்களில் அதிகம் நடித்ததுடன், ரஜினிக்கு சினிமா மற்றும் அரசியல் நிகழ்வுகளில் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்..

எந் ஒரு அரசியல்வாதிக்கும் பயப்படாமல் தனது மனதில் பட்ட கருத்துக்களை பளிச்சென சொல்பவர் சோ.. இதனாலேயே பலரின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளார். ஆனாலும் இவரால் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் பலரும், அரசியல் தாண்டி இவருடன் தனிப்பட்ட நட்பில் இருந்து வந்தார்கள் என்பதுதான் இவரிடம் உள்ள தனிச்சிறப்பு. மிகவும் நுட்பமான அரசியல் விமர்சகரான இவர் நேரடி அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் கூட சில சமயங்களில் ஒரு கிங் மேக்கராகவே மாறியவர்..

இப்படி சகல சிறப்புகளும் புகழும் வாய்ந்த சோ.ராமசாமி இன்று நம்முடன் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.