சித்திரம் பேசுதடி-2 – விமர்சனம்

2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்திற்கு இந்த படத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. உலா என்ற பெயரில் உருவான படம் தான் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.. விதார்த், அசோக், அஜ்மல், நிவாஸ், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, காயத்ரி, சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன் என நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள்..

48 மணிநேரங்களில் நடக்கும் நான்கு வெவ்வேறு கதைகளின் இணைப்பு தான் இதன் கதைக்களம். படமாக பார்த்தால் மட்டுமே அழகாக தெளிவாக புரியக்கூடிய கதை என்பதால் கதைச்சுருகத்தை கூட சொல்ல முடியாத சூழல்.. காரணம் மூன்று நான்கு கிளைகதைகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து பிணைந்து இருக்கின்றன.

அதேசமயம் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து தங்களது திறமையால் இந்தப்படத்தை தாங்கிப்பிடிப்பது படத்திற்கு பிளஸ்.. குறிப்பாக ராதிகா ஆப்தே, விதார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி சென்றிருக்கிறார் டிவைன் பிராவோ. வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார்.

கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விதார்த்தின் நடிப்பு ஒரு விதம் என்றால், சலீம் எனும் நெகடிவ் பாத்திரத்தில் வரும் அசோக் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாறுவதும், நடப்பதைத் தனது இச்சைக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்வதுமாக கலக்கி இருக்கிறார். சொத்தை இழந்து விட்டு பணத்திற்காக மினிஸ்டரை பிளாக் செய்யும் முயற்சியில் இறங்கும் அஜ்மல் உட்பட பலரும் நன்றாக நடிக்கவே செய்துள்ளார்கள்.

பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. சாஜன் மாதவ்வின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இயக்குனர் ராஜன் மாதவ். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை வைத்து அதை ஒரு புள்ளியில் இணைய வைத்திருக்கிறார்.. அதனால் தான் என்னவோ, படம் பார்க்கும் சாதாரண ரசிகர்களுக்கு அது. இடியாப்பம் சிக்கல் போல் தோன்றுகிறது. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. நட்சத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். டெக்னிக்கலாக படங்களை ரசிக்க விரும்பும் ரசிகர்கள் இந்தப்படத்தை பார்க்கலாம்.