பொங்கலுக்கு ரசிகனின் வீடு தேடி வருகிறார் சேரன்..!

 

சொந்தமாக படக்கம்பெனி ஆரம்பித்தார் சேரன்.. சர்வானந்த், சந்தானம், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் ஆகியோரை வைத்து ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தையும் எடுத்து முடித்தார். ஆனால் பத்தோடு பதினொன்றாக தனது படத்தை ரிலீஸ் செய்து பெட்டிக்குள் முடக்க சேரனுக்கு விருப்பமில்லை.. படம் பெருவாரியான ரசிகர்களை சென்றடைய வேண்டும்.. அதே சமயம் போட்ட முதலுடன் கொஞ்சம் லாபமும் வரவேண்டும்.. இதுதான் சேரனின் எண்ணம்.

இதற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சேரனின் கடின உழைப்பால் உருவாகியது தான் C2H. அதாவது சினிமா To ஹோம். இதன்மூலம் சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள நல்ல, தரமான படங்கள் டிவிடிக்களாக மாற்றப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள C2H ஏஜென்ட்டுகளால் வாராவாரம் வெறும் ஐம்பது ரூபாய்க்கே வீடு தேடி வந்துவிடும்.

அப்படி உருவாக்கிய இந்த C2H மூலமாக முதன்முதலாக வரும் பொங்கல் தினத்தன்று தான் இயக்கியுள்ள ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வெளியிடுகிறார். அடுத்தடுத்த வாரங்களில் இதேபோன்று நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் அர்ஜுனன் காதலி, வாராயோ வெண்ணிலாவே ஆகிய படங்களையும் ரிலீஸ் செய்கிறார்.

டிவிடிக்கள் வடிவில் மட்டுமல்லாது டி.டி.எச், ஆன்லைன், செட் ஆப் பாக்ஸ், லோக்கல் கேபிள் ஆகியவற்றில் கூட இதை ஒளிபரப்ப வழிவகை செய்திருக்கிறார் சேரன்.. இதனால் திருட்டு விசிடியின் ஆதிக்கம் வெகுவாக குறைவதோடு நாளடைவில் அவர்களும் இந்த ஒரிஜினல் டிவிடியையே வாங்கி விற்க ஆரம்பிபார்கள் என சேரன் திடமாக நம்புகிறார்.

நம்பிக்கை தானே வாழ்க்கை.. இதனால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதன் லாபம் எல்லா வகைகளிலும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் சேரன்.  தமிழ்சினிமாவின் வினியோக முறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் சேரனின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சொல்லலாமே.