‘சென்னை- 28’ – 2ஆம் பாகத்தை தொடங்கினார் வெங்கட் பிரபு..!

ch-28

பத்து வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெங்கட்பிரபுவின் டைரக்‌ஷனில் முதல் படமாக வெளியானது ‘சென்னை-600028’. சின்ன பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளியதோடு அந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் புகழ் வெளிச்சம் பாய்ச்சியது.

அதன்பின் வெங்கட் பிரபுவின் டைரக்சனிலேயே சரோஜா, கோவா ஆகிய படங்களில் இந்த டீமில் உள்ள சிலர் ஒன்றாக இணைந்து நடிக்கவும் செய்தனர். ஆனால் அதன்பின்னர் அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கம் அளவுக்கு உயர்ந்துவிட்டார் வெங்கட் பிரபு..

ஆனால், தற்போது நிலவும் சூழலை மனதில் கொண்டு ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, கடந்த வருடத்தில் இருந்தே ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கியிருந்தார் வெங்கட்பிரபு. இதோ இன்று பூஜையுடன் படத்தையும் டேக் ஆப் செய்துவிட்டார் வெங்கட் பிரபு.. இன்னும் பெயர்சூட்டப்படாத இந்தப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ..?