சென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்

சாதாரண படம் தானே என சுவாரஸ்யம் இல்லாமல் தியேட்டரில் போய் உட்காருபவர்களை சில படங்கள் ‘அட.. இது இவ்வளவு ஜாலியான படமா’ என ஆச்சர்யப்படுத்தி விடும்.. அப்படி ஒரு படம் தான் இந்த சென்னை 2 சிங்கப்பூர்’.

சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர் நாயகன் கோகுல் ஆனந்த். ஆனால் அவர் போகும் இடமெல்லாம் அவருக்கு முன்னதாக அவரது விதி சென்று விளையாடுகிறது. சென்னையில் வாய்ப்பு தருவதாக சொன்ன தயாரிப்பாளர் ஏமாற்றிவிட்ட நிலையில், நண்பன் ஒருவர் மூலமாக சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதைசொல்ல செல்கிறார் கோகுல்.

விதி அங்கேயும் முன்னே போய் நிற்கிறது. யாரை பார்க்க வந்தாரோ அந்த தயாரிப்பாளர் இவர் சிங்கப்பூரில் கால்வைத்த அதே நேரம் விபத்தில் சிக்கி மரணம் அடைகிறார். கோகுலின் பாஸ்போர்ட்டும் தொலைந்து விடுகிறது. அந்த சமயம் சினிமாவில் கேமராமேனாக துடிக்கும் வானம்பாடி என்கிற ராஜேஷ் பாலச்சந்திரனின் நட்பு கிடைக்கிறது. அவர்மூலமாக கோடீஸ்வரரான மைக்கேல் முருகானந்தம் என்கிற ஷிவ் கேசவ்வை சந்தித்து, ஒரு படம் தயாரிக்க வைக்க சம்மதிக்க வைக்கின்றனர்.

இந்தநிலையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட அஞ்சு குரியனை சந்திக்கும் கோகுல், அவர் மீது காதலாகிறார். ஆனால் அவரது சிகிச்சைக்காக பெரிய அளவில் பணம் தேவைப்பட, தங்கள் படத்தை தயாரிக்க முன்வந்த ஷிவ் கேசவ்விடமே கொள்ளையடிக்கின்றனர் நண்பர்கள் இருவரும். மருத்துவமனையில் பணம் கட்டி சிகிச்சைக்கு தயாரான நேரத்தில், அஞ்சு குரியனை ஆள்வைத்து கடத்துகிறார் ஷிவ் கேசவ். கோகுலால் அந்தப்பணத்தை திருப்பிக்கொடுத்து தனது காதலியை காப்பாற்ற முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன் இருவரின் உயல்பான நடிப்பை பார்க்கும்போது புதுமுகங்கள் போலவே இல்லை. பல படங்களில் பார்த்து நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் போல தோன்றுவதால் படத்துடன் இயல்பாக நம்மால் ஒன்ற முடிகிறது. இவர்கள் இருவருடன் படம் நெடுக கூட்டணி அமைத்து காமெடியில் கலக்கி இருக்கிறார் வானம்பாடியாக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன். மனிதருக்கு சினிமாவில் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு..

அழகான வில்லனாக வந்து க்ளைமாக்சில் அல்பத்தனமான காரியங்களை பண்ணி கிச்சுகிச்சு மூட்டும் ஷிவ் கேசவ் படம் முழும் நம்மை ரசிக்க வைக்கிறார். கடத்தல் கூட்ட தலைவன் பாப்பா பலாஸ்ட் ஆக நடித்துள்ள எம்.சீ.ஜெஸ் மற்றும் அவரது கையாட்கள் கடைசி இருபது நிமிட காமெடிக்கு உத்தரவாதம் தருகின்றனர். அஞ்சு குரியனின் தந்தையாக வரும் இயக்குனர் ராஜாவின் பங்களிப்பு சிறப்பு.

பாடல்களை அளவாக பயன்படுத்தி, பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கும் ஜிப்ரான் இந்தப்படத்தின் முக்கிய தூண்களில் ஒருவர். சிங்கப்பூர் தான் கதைக்களம் என்றாலும் அதன் பிரமாண்டத்தை மட்டுமே காட்டிக்கொண்டிராமல் எதார்த்தமான ஒரு சிங்கப்பூர் வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து.

படத்தின் சுவாரஸ்யமே போரடிக்காத திரைக்கதையும், அழகாக கோர்க்கப்பட்ட நகைச்சுவை காட்சிகளும் தான். முக்கியமாக அழகான வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன. கதாநாயகிக்கு கேன்சர் என்பதற்காக எந்த ஒரு இடத்திலும் சீரியஸ்னஸ் தலைகாட்டாமல் பார்த்துக்கொண்டுள்ளார்கள். இரண்டு மணி நேரம் அருமையான பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ள இயக்குனர் அப்பாஸ் அக்பர் கவனிக்கத்தக்க இயக்குனராக தன்னை பதிவு செய்துள்ளார்.

சென்னை 2 சிங்கப்பூர் ; எதிர்பார்த்து செல்கிறவர்களையும் எதிர்பாராமல் வருபவர்களையும் ஏமாற்றாத ஒரு ஜாலியான பயணம் ஆக இருக்கும்.