சாம்பியன் – விமர்சனம்

கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக மூன்றாவதாக கால்பந்தை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் மூன்றாவது படம் இது.. முந்தைய படங்களிலிருந்து இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தை எப்படி வித்தியாசப்படுத்தி இருக்கிறார் பார்க்கலாம்.

இதுவும் வடசென்னை பின்னணியில் நடக்கும் கதைக்களம்.. கால்பந்து விளையாட்டு வீரரான மனோஜ் பாரதி ஒரு கட்டத்தில் அந்த ஏரியா தாதாவுக்கு அடியாளாக மாறிவிடுகிறார்.. தனது மகன் விஷ்வாவையாவது சிறந்த கால்பந்தாட்ட வீரராக மாற்ற நினைக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக கால்பந்து விளையாடும் போது இறந்து விடுகிறார்.. இதனால் விஷ்வாவின் ஆசைக்கு அவரது அம்மா நிரந்தர தடை போடுகிறார்.. இருந்தாலும் அம்மாவுக்கு தெரியாமல் கால்பந்து வீரராக மாறும் விஷ்வா, ஒரு கட்டத்தில் தாயிடம் அடம்பிடித்து கால்பந்து பயிற்சியாளரை தேடி செல்கிறார்.

அந்த சமயத்தில்தான் தனது தந்தை இயற்கையாக இறக்கவில்லை என்றும் கொல்லப்பட்டார் என்றும் விஷ்வாவுக்கு தெரியவருகிறது. பழிவாங்க புறப்படும் விஷ்வாவை பக்குவப்படுத்தி கால்பந்தில் கவனம் செலுத்த வைக்க முயற்சிக்கிறார் பயிற்சியாளர் நரேன். ஆனாலும் ஒருகட்டத்தில் விதி விஷ்வாவை கையில் ஆயுதம் தூக்க வைக்கிறது.. மனோஜ் பாரதியை கொன்றது யார்..? என்ன காரணம்..? விஸ்வா தனது தந்தையின் சாவுக்கு காரணமானவர்களை பழி வாங்கினாரா..? இல்லை விளையாட்டில் கவனம் செலுத்தி முன்னேறினாரா என்பது மீதிக்கதை

வடசென்னை பகுதியில் வசிக்கும் ஒரு சாதாரண இளைஞன் கால்பந்து விளையாடுவதில், தனது பகுதியில் சந்திக்கும் பிரச்சினைகளையும் அதைத்தாண்டி மாநில, தேசிய அளவில் பங்கெடுக்க முயற்சிக்கும்போது எதிர்ப்படும் வர்க்க பிரச்சினைகளையும் போகிற போக்கில் அழகாக கோடிட்டு காட்டியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். அதேசமயம் வழக்கமான விளையாட்டு போட்டிகளை மட்டுமே மையமாக கொள்ளாமல் பாண்டியநாடு பாணியில் பழிதீர்க்கும் படலமாக இந்த படத்தை திசை திருப்பியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.. அதுவே இந்த படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்துவிட்டது இல்லையெனில் இன்னொரு விளையாட்டு படம் என்கிற ரீதியில் போர் அடித்திருக்கும்..

அறிமுக நாயகனாக விஷ்வா ஹீரோவுக்கான எந்த ஒரு வழக்கமான இலக்கணமும் இல்லாவிட்டாலும் அந்த கதாபாத்திரத்திற்கு நச்சென பொருந்துவதால் எந்த வித தயக்கமும் இன்றி முழு படத்திலும் அவரையும் அவரது கோபத்தையும் ரசிக்க முடிகிறது. இந்தப்படம் அவருக்கு வெற்றி தான் என்றாலும் இனி அடுத்த தேர்ந்தெடுக்கும் படங்கள்தான் அவரது பயணம் பூப்பாதையா இல்லை முள்பாதையா என தீர்மானிக்கும்..

இரண்டு கதாநாயகிகள் நாயகனின் கால்பந்தாட்டத்தில் மயங்கி காதலிப்பது போல் வரும் காட்சிகள் வழக்கமான கிளிஷேக்களாக கடந்து போகின்றன.. நாயகன் புதுமுகம் என்பதால் படத்தை தாங்கிப்பிடிக்கும் வலுவான தூணாக கால்பந்து பயிற்சியாளராக நரேன்.. கைதி படத்தை தொடர்ந்து இன்னுமொரு அருமையான கதாபாத்திரம்.. கடைசிவரை ஜமாய்த்து இருக்கிறார் மனிதர்..

இரண்டு இளம் கதாநாயகிகள் இருந்தாலும் கதையின் நாயகியாக, விஷ்வாவின் அம்மாவாக வருபவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பால் நம் மனதில் இடம் பிடிக்கிறார்.. நீண்ட நாளைக்குப் பிறகு மனோஜ் பாரதியை ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் பார்க்கும்போது ஏன் இந்த மனிதர் இதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்காமல் விட்டு விட்டார் என்கிற கேள்வி எழவே செய்கிறது.. வில்லனாக நடித்திருப்பவர் படம் முழுவதும் செம்ம கெத்து காட்டுகிறார்..

முழுவதும் விளையாட்டு போட்டி வெற்றி என்ற படத்தை நகர்த்தாமல் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் உள்ள அரசியல் விளையாட்டு வீரர்கள் கூலிப்படை காரர்களாக மாற்றப்படும் அபாயம் அதையும் தாண்டி அவர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்கிற ஆதங்கம் என அனைத்தையும் கலந்து கொடுத்திருப்பதால் படம் சுவாரசியம் குறையாமல் செல்கிறது.. அதே சமயம் பள்ளி கல்லூரி காதல் காட்சிகளை இயக்குனர் சுசீந்திரன் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மற்றபடி வேறு எந்த குறைகளும் இல்லாத இந்த சாம்பியன் எளிதாக பரிசை தட்டிச் செல்கிறான்.