வீட்டிற்கே தேடி வரும் திரைப்படம்.. கமல் ஆசியுடன் சேரன் புதிய முயற்சி..!

‘ட்ரீம் தியேட்டர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சேரன், அதன் மூலமாக தற்போது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து, இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படம் கடந்த வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்னும் வெளியாகாத நிலையில் வெளியாவதில் இதற்கு தீர்வுகாணும் விதமாக இயக்குனர் சேரன் உருவாக்கியுள்ள நிறுவனம் தான் C2H. அதாவது சினிமா TO ஹோம். தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களை தியேட்டர்களில் அல்லாமல் நேரடியாக மக்களுக்கு கொண்டும் செல்லும் வழியை இந்த C2H உருவாக்கியுள்ளது.

“என் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏன் என பலர் என்னிடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். படம் தயாராகிவிட்டது. அற்புதமாக வந்திருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் படத்தை ரிலீஸ் செய்து அது நன்றாக இருக்கிறது என்ற seythi மக்களை சென்றடைவதற்குள் அடுத்த படத்துக்காக, ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு தூக்கி விடுவார்கள்.. கடைசியில் பணம் போச்சே.. படம் போச்சே என புலம்பிக்கொண்டு உட்கார நான் விரும்பவில்லை. இந்தப்படம் கடைக்கோடியில் இருக்கும் ரசிகனுக்கும் சென்று சேரும் விதமாக ஒரு புதுமையான முயற்சியை கடந்த எட்டுமாதமாக உழைத்து உருவாக்கியுள்ளோம். அதுதான் இந்த C2H. இது என் படத்துக்கு மட்டுமல்ல, மற்ற நல்ல படங்களுக்கும் இது பொருந்தும்..” என கூறுகிறார் சேரன்..

தனது எட்டுமாத கடின உழைப்புடன் இதை சாத்தியமாக்கியுள்ள சேரன் நேற்று இந்த நிறுவனத்தை காமராஜர் அரங்கத்தில் நடந்த துவக்க விழாவில் அறிமுகப்படுத்தினார். தற்போது படப்பிடிப்பில் காயம் பட்ட காரணத்தால் கமல் நேரில் வராவிட்டாலும் கமலின் ஆசிர்வாதத்தோடு தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் சேரன். விஸ்வரூபம் வெளியீட்டின்போதே இதேபோன்றதொரு யுக்தியை சொன்னவர் தான் கமல்.
இந்த விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், கே.பாக்யராஜ், சீமான், அமீர், ராம் இவர்களுடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு இந்த அமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்கள். சேரன் உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பின் மூலம் தனது படங்களை வரிசையாக ரிலீஸ் செய்ய ஒப்புதல் தந்து அவருக்கு நட்புக்கரம் நீட்டியிருக்கிறார் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார்.

இதன்மூலம் சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படங்கள் டிவிடிக்களாக மாற்றப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள C2H ஏஜென்ட்டுகளால் வெறும் ஐம்பது ரூபாய்க்கே வீடு தேடி வந்துவிடும். மேலும் டி.டி.எச், ஆன்லைன், செட் ஆப் பாக்ஸ், லோக்கல் கேபிள் ஆகியவற்றில் கூட இதை ஒளிபரப்ப இருப்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே படம் பார்க்கும் வசதி உருவாகிறது.

இதனால் திருட்டு விசிடியின் ஆதிக்கம் வெகுவாக குறைவதோடு நாளடைவில் அவர்களும் இந்த ஒரிஜினல் டிவிடியையே வாங்கி விற்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதன் லாபம் எல்லா வகைகளிலும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் இயக்குனர் சேரன்.