போகன் – விமர்சனம்

bogan review

கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வைத்து ஹை-டெக் ஆக ஒரு கதை பண்ண முடிந்தால் அது தான் ‘போகன்’..

போலீஸ் உயர் அதிகாரி ஜெயம் ரவி.. அவரது தந்தை ஆடுகளம் நரேன் வங்கி மேனேஜர். ஒருநாள் திடீரென வங்கியில் உள்ள பணத்தை திருடியதாக கைதாகிறார் நரேன்.. சிசி டிவி வீடியோ ஆதாரம் வலுவாக இருந்தாலும், தான் பணத்தை திருடவில்லை என்கிறார் நரேன் ஆணித்தரமாக. என்ன நடந்திருக்கும் என மூளையை கசக்கும் ஜெயம் ரவிக்கு ஏற்கனவே இதே போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக தெரியவருகிறது..

இரண்டு சம்பவங்களையும் அலசி ஆராய்ந்ததில் இதன் பின்னணியில் ஹைடெக் கிரிமினல் அரவிந்த்சாமி இருப்பது தெரிய வருகிறது.. அவரை சந்தேகப்படாத வகையில் தனது நட்பு வலையில் தந்திரமாக வீழ்த்தி கைது செய்கிறார் ஜெயம் ரவி. ஆனால் விசாரணை அறையில் தனது கூடுவிட்டு கூடு பாயும் திறமையால் ஜெயம் ரவியின் சக போலீஸ்காரரான வருண் உடலில் புகுந்து இன்னொரு போலீஸ்காரரான நாகேந்திர பிரசாத்தை கொல்கிறார் அரவிந்த் சாமி.. இறுதியாக தன்னை தாக்க வரும் ஜெயம் ரவியின் உடலில் புகுந்து கொள்கிறார்..

இனி ஹீரோ உடலில் வில்லன்.. வில்லன் உடலில் ஹீரோ.. கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது இல்லையா.. ஆகவே மொத்தப்படத்தையும் தியேட்டரில் பார்க்கும் சுகானுபவத்தை கட்டாயம் பெறுங்கள்..

நடிப்பு என வரும்போது ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவருமே டபுள் டூட்டி பார்த்திருக்கிறார்கள். இடைவேளைக்கு முன் இருவரும் தங்களது ஒரிஜினல் மேனரிசங்களால் நம்மை கவர்கின்றனர்.. அதேசமயம் கூடுவிட்டு கூடு பாய்ந்த பின் இருவருமே அடுத்தவர் உருவங்களில் தங்களது நடிப்பில் அந்த மாறுபாட்டை அழகாக பிரதிபலித்திருக்கின்றனர்.. தனது உடலில் இருக்கும்போதும் சரி, ஜெயம் ரவியின் உடலில் புகுந்து கொண்ட போதும் சரி அரவிந்த்சாமிக்கு கொஞ்சம் அதிகமாகவே கைதட்டல் கிடைப்பது உண்மை.

ஹன்ஷிகாவுக்கு அவரது மற்ற படங்களை விட இது கொஞ்சம் மாறுபட்ட படம் தான்.. குறிப்பாக நடு ராத்திரியில் போலீஸ்காரர்களிடம் அவர் பண்ணும் சலம்பல் இருக்கிறதே, இன்னொரு ஜெனிலியா கிடைத்து விட்டார் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்.. க்ளைமாக்ஸ் நெருங்கும்போதும் அவர் பங்கு அதிகம்..

போலீஸ் உயர் அதிகாரியாக பொன்வண்ணன், ஆர்க்கியாலஜி புரபசராக நாசர் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நிறைவாக செய்திருக்கிறார்கள். ஜெயம் ரவியின் நண்பராக நீண்ட நாளைக்குப்பின் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவாவின் தம்பி) ஆச்சர்யப்பட வைக்கிறார். மற்ற போலீஸ் கேரக்டர்களில் வருணும் அக்சரா கவுடாவும் கன கச்சிதம்.

இமானின் இசையில் ‘டமாலு டுமீலு’ பாடல் உடம்பை துள்ள வைக்கிறது என்றால் ‘செந்தூரா’ பாடல் மனதை துள்ள வைக்கிறது. பின்னணி இசையிலும் அவ்வளவு நேர்த்தி.. படத்தின் வேகத்திற்கும் பிரமிப்புக்கும் சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவுடன் ஆண்டனியின் படத்தொகுப்பும் கைகோர்த்து துணை நின்றிருக்கிறது..

இதற்கு முந்தைய ‘ரோமியோ ஜூலியட்’ படமாகட்டும், இதோ இந்த ‘போகன்’ படமாகட்டும் ரசிகர்களுக்கு இம்மியளவு கூட போர் அடிக்க விட்டுவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு காட்சிகளில் வேகம் கூட்டியிருக்கிறார் இயக்குனர் லட்சுமண். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்று சொல்லும் அளவுக்கு ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவருக்குமே சம முக்கியத்துவம் கொடுத்திருப்பதில் சூப்பர் பாஸ் ஆகியிருக்கிறார். கூடுவிட்டு கூடு பாயும் விஷயத்திலும், ஜெயம் ரவியின் உடலில் அரவிந்த்சாமி புகுந்தபின் நடக்கும் சில விஷயங்களிலும் சின்னச்சின்ன லாஜிக் மிஸ்ஸிங் இருந்தாலும் கூட, கதை நகரும் வேகத்தில் அவை ஒன்றும் பெரிதாகவும் நம்மை உறுத்தவில்லை.. மற்றபடி இந்தப்படம் ஏற்கனவே வெளியான ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என்று சொல்லப்படுவதெல்லாம் நமக்கு தேவையில்லாத விஷயம்..

மொத்தத்தில் போகன் இரண்டேகால் மணி நேர நான்ஸ்டாப் சரவெடி