பில்லா பாண்டி – விமர்சனம்

வில்லன் நடிகராக வலம் வந்த ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக புரமோஷன் ஆகியிருக்கும் படம் தான் இந்த பில்லா பாண்டி.

கொத்தனார் வேலை செய்யும் பில்லா பாண்டி அஜித் ரசிகர். அவரை காதலிக்கிறார் மாமா மகள் சாந்தினி. ஆனால் அவரோ அஜித் ரசிகர் என சொல்லிக்கொண்டு ஊதாரித்தனமாக செலவு செய்கிறார் என அவருக்கு பெண் தர மறுக்கிறார் மாமா மாரிமுத்து. இந்தநிலையில் பக்கத்து ஊரில் சங்கிலி முருகனின் புதிய வீட்டை கட்டித்தரும் காண்ட்ராக்ட் சுரேஷுக்கு கிடைக்கிறது.

லீவிற்கு ஊருக்கு வரும் சங்கலி முருகனின் பேத்தி இந்துஜா, சுரேஷின் குணத்தால் கவரப்பட்டு அவரை ஒருதலையாக காதலிக்கிறார். வீடு கிரகப்பிரவேசத்தின்போது தனது காதலை அவர் வெளிப்படுத்த, கோபமான இந்துஜாவின் தந்தை, தனது நண்பர் மகனுக்கு திருமணம் செய்வதற்காக அவரை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து செல்கிறார்.

செல்லும் வழியில் காரிலிருந்து தற்கொலைக்கு முயலும் இந்துஜாவால் கார் விபத்துக்கு ஆளாகி, அவரது பெற்றோர் இறந்துவிட, தலையில் அடிபட்டதால் பழைய நினைவுகளை மறந்து ஏழு வயது சிறுமியின் மனநிலைக்கு ஆளாகிறார் இந்துஜா. இந்த விபரங்கள் ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவரும் நிலையில் தாத்தா சங்கிலி முருகனும் மரணத்தை தழுவ, நிர்க்கதியாக நிற்கும் இந்துஜாவை தனது வீட்டிற்கு அழைத்துவந்து பாதுக்காகிறார்.

இதனால் ஒருபக்கம் சாந்தினி சண்டை பிடிக்க, இன்னொரு பக்கம் சுரேஷ் மீது உள்ள கோபத்தால் ஊர்க்காரர்கள் இந்துஜாவை ஊரை விட்டு விரட்ட முயற்சிக்கின்றனர். சாந்தினிக்கு தீவிரமாக வேறு மாப்பிள்ளை பார்க்கும் வேலை நடக்க, தனது வீட்டை விற்று இந்துஜாவுக்கு வைத்தியம் பார்க்கும் வேலையாக அலைகிறார் சுரேஷ். இந்த போராட்டத்தில் ஆர்.கே.சுரேஷ்-சாந்தினியின் காதல் என்ன ஆனது..? இந்துஜா குணமடைந்தாரா.? என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும்போது ஏற்படும் சில தடுமாற்றங்கள் தவிர, நாம் ஏற்கனவே பார்த்து பழகிய முகம் என்பதால் ஆர்.கே.சுரேஷை நம் மனது எளிதில் ஏற்றுக்கொள்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் நம்மை நெகிழ வைத்து விடுகிறார். காதல், சென்டிமென்ட், ஆக்சன் என நடிப்பில் வெரைட்டி காட்டினாலும் அவரது கேரக்டரை இன்னும் வலுவானதாக வடிவமைத்திருக்கலாமே என்கிற எண்ணமும் ஏற்படவே செய்கிறது.

மாமன் பின்னால் சுற்றும் துறுதுறு கிராமத்து பெண்ணாக சாந்தினி. ஆர்.கே.சுரேஷுக்காக மனம் கனக்கும் முடிவு எடுக்கும்போது நெகிழ வைக்கிறார். பட்டணத்து பெண்ணாக ஆர்.கே.சுரேஷின் குணாதிசயங்களை கண்டு காதலில் விழுவதும் பின் மனநலம் பாதிக்கப்பட்டு சின்ன குழந்தையின் இயல்பை பிரதிபலிப்பதும் என மிகப்பெரிய சுமையை சுமந்திருக்கிறார் இந்துஜா. ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடிக்கும்போது ஓவர் ஆக்டிங் நன்றாகவே தெரிகிறது.

காமெடிக்கு தம்பி ராமையா மற்றும் விஜய் டிவி அமுதவாணன் இருவரும் முயற்சி செய்து கலகலப்பூட்டுகிறார்கள்.. வில்லனாக படத்தின் தயாரிப்பாளர் கே.சி.பிரதாப்பே நடித்துள்ளார். பரவாயில்லை என்றே சொல்லலாம். சங்கிலி முருகன் வழக்கம்போல பாந்தமான நடிப்பு. மாமனாக வரும் மாரிமுத்து சரியான கடுகு பட்டாசாக பொரிகிறார். சில காட்சிகளே வந்தாலும் ஜென்டில்மேன் கேரக்டரில் சௌந்தர்ராஜா மனதில் நிற்கிறார்.

இயக்குனர் ராஜாசேதுபதியை பல படங்களில் காமெடியனாக பார்த்திருக்கிறோம். இதில் இயக்குனராக மாறிய அவர், கதை விஷயத்தில் மட்டும் தொண்ணூறுகள் காலகட்டத்திலேயே நின்றுவிட்டார் போலும். ஹீரோயின் டைரி எழுதுவது, ஹீரோ மனநலம் பாதித்த பெண்ணுக்காக ஊரை எதிர்ப்பது, க்ளைமாக்சில் விபரீதமாக முடிவெடுப்பது என சில காட்சிகளை உதாரணமாக சொல்லலாம். காட்சிக்கு காட்சி அஜித்தை ஆஹா, ஓஹோவென புகழ்வது அவரது ரசிகர்களை குளிர்விக்குமோ என்னவோ, படம் பார்க்கும் சாதாரண ரசிகனுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. தவிர ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகர் என்பது கதையில் எந்தவித பாதிப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தவும் இல்லை..

அதேசமயம் ஆர்.கே.சுரேஷுக்கு இன்னும் நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் அவர் ஒரு ஹீரோவாகவும் சாதிப்பார் என்கிற நம்பிக்கையை இந்தப்படம் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.