பிகில் – விமர்சனம்

வட சென்னை தாதா ராயப்பன் (விஜய்) தனக்கு அடுத்து வரும் தலைமுறையாவது நன்கு படித்து விளையாட்டுக்கள் மூலம் முன்னேற வேண்டும் என்பதற்காக தனது மகன் மைக்கேலை (விஜய்) கால்பந்தாட்டத்தில் ஈடுபடுத்துகிறார். ஆனால் போட்டியில் மைக்கேல் கலந்துகொள்ள செல்வதற்கு முன்பாக அவரது கண்ணெதிரே ராயப்பன் எதிரிகளால் கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு கால்பந்து ஆட்டத்தை விட்டு ஒதுங்கினாலும் தனது தம்பி கதிர் மூலமாக பெண்கள் கால்பந்தாட்ட குழுவை ஆரம்பித்து அவர்களை தேசிய அளவில் தயார் செய்கிறார் மைக்கேல்

பழைய பகை காரணமாக மைக்கேலின் மீதான தாக்குதல் குறி தவறி கதிரை தாக்குகிறது. இதனால் கதிருக்கு பதிலாக தானே கோச்சாக களமிறங்குகிறார் விஜய். அவரை ஒரு ரவுடியாகவே பார்க்கும் வீராங்கனைகள் அவருக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அதேபோல டெல்லியில் தேர்வுக்குழுவில் காத்திருக்கும் ஹைடெக் வில்லன் ஜாக்கி ஷெராப் இவர்கள் அணியை போட்டியில் விளையாட விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார். இதையெல்லாம் தாண்டி தனது அணியை வெற்றிபெற வைத்தாரா மைக்கேல் என்பதுதான் மீதி கதை..

தந்தை ராயப்பன், மகன் மைக்கேல் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய். இதில் தந்தையாக நடிப்பில் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார் விஜய். இருந்தாலும் அவரது இளமையான தோற்றம் அதற்கு ஒத்துழைக்க மறுத்து இருப்பது நன்றாகவே தெரிகிறது. அதேசமயம் துறுதுறு இளைஞன் மைக்கேலாக வரும் விஜய்யை பார்க்கும் போது இன்னும் 10 வருடத்திற்கு இவர் இன்னும் கல்லூரி மாணவனாகவே நடிக்கலாம் என்பது போல சுறுசுறுப்பாக இருக்கிறார்.. வழக்கமான அவரது நக்கல் நையாண்டி மேனரிசங்களுக்கும் குறைவில்லை.. ஆனால் பல இடங்களில் அதுவே நமக்கு போரடிக்கவும் செய்கிறது.. இனி வரும் படங்களில் விஜய் அதை மாற்றிக் கொள்வார் என நம்புகிறோம்.. குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் விஜயை விட இடைவேளைக்குப்பிறகு கோச்சாக வரும் விஜய் பாஸ் மார்க் வாங்குகிறார்.

விஜய் அளவுக்கு ஒரு கதாநாயகி வேண்டும் என்பதால் நயன்தாராவை சேர்த்து இருக்கிறார்களோ என்று தான் இடைவேளைக்கு முன்புவரை எண்ணத் தோன்றுகிறது. இடைவேளைக்குப்பிறகு ஓரளவு நடிக்கவும் வாய்ப்பு தந்து அதை சரிக்கட்டியிருக்கிறார்கள்.. நயன்தாராவையும் தாண்டி படத்தில் வீராங்கனைகள் ஆக வரும் இந்துஜா, வர்ஷா, ரோபோ சங்கர் மகள் உள்ளிட்ட அனைவரும் நம் மனதை கவர்கிறார்கள்.. குறிப்பாக இந்துஜா இந்த படத்தில் தனது பங்களிப்பை நிறைவாகவே செய்திருக்கிறார்.. மற்ற வீராங்கனைகளும் ஒவ்வொரு தனி திறமையுடன் நம்மை கவர்கிறார்கள்..

பரியேறும் பெருமாள் படத்தில் அன்லிமிட் சாப்பாடு சாப்பிட்ட கதிருக்கு இதில் அளவு சாப்பாடு கூட போடவில்லையே என்பது வருத்தம் தான்.. கிடைத்த கேப்பில் சிங்கிள் ரன்களாக தட்டுகிறார். வில்லன்களாக டேனியல் பாலாஜி மற்றும் ஜாக்கி ஷெராப்.. ஒருவர் லோ லெவலில் வில்லத்தனம் செய்ய இன்னொருவர் ஹைடெக் ஆக வில்லன் முகம் காட்டுகிறார்.. என்றாலும் பல படங்களில் ஏற்கனவே நாம் பார்த்ததுதான்.. விஜய்யின் அடிப்பொடிகளாக வரும் ஆனந்தராஜ், யோகிபாபு அன் கோ, அட்மாஸ்பியருக்காக மட்டுமே சேர்க்கப்பட்டார்கள் போல தெரிகிறது. யோகிபாபுவுக்கு கூட ஒன்றிரண்டு இடங்களில் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும், ஆனந்தராஜை படம் முழுவதும் வீணடித்து இருப்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

சிங்கப்பெண்ணே, வெறித்தனம், மாதரே ஆகிய பாடல்கள் காட்சிகளுடன் பார்க்கும்போது பொருத்தமாக இருந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் இசை தேய்பிறை காலத்தில் இருப்பதை நன்றாகவே உணர முடிகிறது ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவு இயக்குனர் அட்லீயின் வேகத்திற்கு இணையாக ஈடு கொடுத்து பயனித்திருக்கிறது.

ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே அதில் ஏற்கனவே வெளியான ஸ்போர்ட்ஸ் படங்களின் பல காட்சிகளும் அதன் சாயலும் இடம் பெறுவதை தவிர்க்கவே முடியாது.. இந்த பிகில் படமும் அதற்கு விதிவிலக்கல்ல ..அதனாலேயே இந்தப்படத்தில் விஜய், அவருக்கான பகை, அதன் பின்னணியில் விளையாட்டு என்று திரைக்கதையை வேறு திசையில் சுற்றி வளைத்து அழைத்துச் செல்கிறார் அட்லீ.. படத்தின் நீளத்தை போல அதுவும் அலுப்பைத் தருகிறது. விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் முயற்சியில் இறங்கிய அட்லீ, பொதுவாக ரசிகர்களை பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்பது பல காட்சிகளில் தெரிகிறது.

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. மற்றவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்