பாஸ்கர் தி ராஸ்கல் – ஹைலைட்ஸ்

 

இயக்குனர் சித்திக்கின் படங்கள் நூறு சதவீதம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருபவை.. மலையாள இயக்குனர் தான் என்றாலும்’ இன்றளவும் தமிழ் சேனல்களின் காமெடி பசிக்கு இவர் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ ஆகிய படங்கள் தான் பெருந்தீனி போட்டு வருகின்றன. அப்படிப்பட்ட சித்திக்குடன் தான் மெகாஸ்டார் மம்முட்டியும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் பாஸ்கர் தி ராஸ்கல்’ என்கிற படத்திற்காக கைகோர்த்திருக்கிரார்கள்.

இந்தப்படத்தில் கல்ப் ரிட்டர்ன் மலையாளியாக நடித்திருக்கிறார் மம்முட்டி.. ஆனால் தனது குடும்பத்தாரிடமும் சுற்றியுள்ளவர்களிடமும் முன்பு ஏற்பட்ட அனுபவங்களால் அனைவரிடமும் ரப் அன்ட் டப்பாகவே நடந்து கொள்கிறார். அதனால் தான் அவரது கேரக்டரை பிரதிபலிக்கும் விதமாக ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதில் சொந்தமாக கார் வைத்திருக்கும் மம்முட்டிக்கு, ட்ரைவராக நடிக்கிறார் முன்னணி காமெடி நடிகரான ஹரிஸ்ரீ அசோகன். இவர் பெயரளவுக்குத்தான் ட்ரைவர்.. வண்டியை கழுவி துடைப்பதுதான் இவரது வேலை.. மற்றபடி எங்கே கிளம்பினாலும் இவர் பின் சீட்டில் அமர்ந்துகொள்ள, மம்முட்டிதான் எப்போதும் காரை ஓட்டுவாராம். இவர் மம்முட்டிக்கு பேச்சுத்துணைக்காக கூடவே போய்வருவாராம்.

இந்தப்படத்தில் மிக உயரிய படிப்பை படித்தவராக நயன்தாரா நடித்திருக்கிறார். ஆனால் படிப்பிற்கேற்ற வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தரமான ஸ்வீட்களை தயார் செய்து விற்பனை செய்து, அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுபவராக நடித்திருக்கிறார்.

நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்கூட்டியே வந்து தயாராக நிற்பதும், எந்த ஒரு ஷாட்டுக்கும் அழைத்ததும் தாமதிக்காமல் வருவதும் என அதே பழைய நயன்தாராவாகவே இருக்கிறார். இன்று வரும் புதுமுகங்கள் அவரை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்” என நயன்தாராவின் தொழில் பக்தியை பாராட்டியுள்ளார் இயக்குனர் சித்திக்.

தெலுங்கில் ‘சிவா’, ‘சத்யா’, ‘பூத் ரிட்டர்ன்ஸ்’ என ராம்கோபால் வர்மா இயக்கிய சில படங்களில் ஆஸ்தான கதாநாயகனாக நடித்துவந்த ஜே.டி.சக்கரவர்த்தி இந்தப்படத்தின் வில்லனாக, நயன்தாராவின் முன்னாள் காதலனாக நடிக்கிறார்.

இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார் இஷா தல்வார். ஏற்கனவே ‘பால்யகாலசகி’ என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருக்கிறார் இஷா தல்வார்.

வரும் சித்திரை விஷு பண்டிகையின்போது மோகன்லாலின் ‘என்னும் எப்பொழும்’ படமும், மம்முட்டியின் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படமும் ஒரே நாளில் வெளியாவதற்கான சூழல் உருவாகியது.. ஆனால் மோதலை தவிர்க்கும் விதமாக, இரு நடிகர்களும் தங்களுக்கும் செய்துகொண்ட ஏற்பாட்டின்படி, மோகன்லாலின் படம் மார்ச்-27ஆம் தேதியும், மம்முட்டியின் படம் ஏப்ரல்-14ஆம் தேதியும் ரிலீஸ் ஆகின்றன.