சீனியர் ஹீரோயின்களை கௌரவப்படுத்திய பாக்யராஜ்..!

அவ்வப்போது சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த இயக்குனர் பாக்யராஜ், நீண்ட நாளைக்குப்பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘துணை முதல்வர்’. இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக ஜெயராமும் உண்டு. கதாநாயகிகளாக ஸ்வேதா மேனன், சந்தியா இருவரும் நடித்துள்ளார்கள். முதல்வராக மனோபாலா நடித்துள்ளார்.

பாக்யராஜ் கதி-வசனம் எழுத, விவேகானந்தன் என்பவர் இயக்கியுள்ளார். இன்று இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆச்சர்யமான விஷயமாக சீனியர் ஹீரோயின்களான சுகாசினி, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, ரேகா, மீனா, ரோகிணி, கோவை சரளா, ராதிகா, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரை அழைத்திருந்தார் பாக்யராஜ்.

அழைத்ததோடு மட்டுமின்றி அவர்களை மட்டுமே மேடையில் அமரவைத்து கௌரவப்படுத்தினார் பாக்யராஜ். போனால் போகிறதென்று ஆண்களில் ஜெயராமுக்கு மட்டும் ஒரு இடம் கிடைத்தது. விழா நிகழ்ச்சிகளை பாக்யராஜின் சீடரான பார்த்திபன் தொகுத்து வழங்க இன்னொரு சீடரான பாண்டியராஜனும் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்..

விழாவில் முத்தாய்ப்பாக பாக்யராஜ், ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படம் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரான கோபிநாத் அவர்ளை மேடையேற்றி கௌரவப்படுத்தினார். இந்தப்படத்தை இணைந்து தயரித்திருப்பதும் கோபிநாத்தின் மகன் சுரேஷ்தான்.