‘அகோரி’ விழாவில் பேய்க்கும் போலீசுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய பாக்யராஜ்

ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் கே.மேனனுடன் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அகோரி’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினரான இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “இந்த ‘அகோரி ’படத்திற்கு இந்த டைட்டில் பெரிய பிளஸ். சில விஷயங்களைப் பற்றி பலர் எவ்வளவு பேசினாலும், நாம் அதைக் கேட்டுக்கொண்டே இருப்போம். பேயைப் பற்றி பலர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருப்போம்.

எனக்கு மட்டும் ஒன்றே ஒன்று தோன்றும். பேய் இருப்பது உண்மை என்றால், இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்பது இருக்காது. ஒருவரைக் கொலை செய்து விட்டால், அவர் பேயாக வந்து பழிக்குப் பழி வாங்கி கொன்றுவிடுவார். ஆனால் தற்போது கொலையாளியைப் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பேய் என்பது இல்லை என்று என்பது உறுதியாகிறது. ஆனால் பேய் வந்து பழி வாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது.

‘அகோரி’ என்பதை நான் நெகட்டிவ் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் அதனை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன். ’அகோரி’களைப் பற்றி எத்தனை பேர், எத்தனை வகையில் கதை சொன்னாலும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருப்போம்.

நாம் சில விஷயங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றிச் சொல்லலாம். மக்கள் அதை ரசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ‘அகோரி’ என்ற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் மக்கள் நம்பும் வகையில் லாஜிக்குடன் சொல்ல வேண்டும். அப்படித்தான் சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.