பாலுமகேந்திரா பாசறையில் இருந்து ‘தப்பு தண்டா’ பண்ணிய இயக்குனர்..!

Thappu-Thanda

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றி இயக்குனர்களான பாலா, வெற்றிமாறன், ராம் போன்ற இயக்குனர்களை நமக்கு தெரியும்.. ஆனால் பாலுமகேந்திரா ஆரம்பித்து நடத்திவந்த ‘சினிமா பட்டறை’ என்கிற பயிற்சி பள்ளியில் பயின்று முதல் மாணவனாக வெளிவந்து படம் இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீகண்டன்.. படத்தின் பெயர் ‘தப்பு தண்டா’..

பாலுமகேந்திரா பாசறையில் இருந்து வந்ததால் அவரைப்போல் கலைவிருந்து படைக்கும் படங்களைத்தான் இயக்கவேண்டுமா என்ன..? அப்படியெல்லாம் எந்த இலக்கும் வகுத்துக்கொள்ளாமல் ‘தப்பு தண்டா’ என்கிற கமர்ஷியல் படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீகண்டன்..

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஸ்ரீகண்டன், “பாலுமகேந்திரா சார் உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை இயக்கி இருக்கவே மாட்டேன்” என கூறினார்.. இந்த நிகழ்வில் பேரதிசயமாக பாலுமகேந்திராவின் துணைவியார் அகிலாம்மாள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

தேர்தல் நேரத்தில் நடக்கும் பணப்பட்டுவாடாவையும், அதனை பிடிக்க தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் பின்னணியாக வைத்து தப்பு தண்டா படம் தயாராகியுள்ளது. இந்தப்படத்தின் முதல்பாதி டார்க் காமெடியாகவும், இரண்டாவது பாதி க்ரைம் த்ரில்லராகவும் உருவாக்கி இருக்கிறதாம்.

சத்யா, ஸ்வேதா என்ற புதுமுகங்கள் படத்தின் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய மொட்டைத்தலை அஜய்கோஷ் இதிலும் போலீசாக தனது மிரட்டலை தொடர்கிறார். முதல் நாள் ஷூட்டிங் காட்சியிலேயே க்ளைமாக்ஸ் போர்ஷனை எடுத்து, அதில் தான் நடிக்கும் காட்சிகளை, அதாவது தான் மொக்கை வாங்கும் காட்சிகளை படமாக்கியதால் டென்ஷனாகி கோபித்துக்கொண்டு கிளம்பி விட்டாராம் அஜய் கோஷ்,.

அதன்பின் அவரை சமாதானப்படுத்தி அழைத்துவந்தார்களாம்.. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தனது காட்சிகளை படமாக்கும்போதுதான் படத்தில் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டாராம் அஜய்கோஷ்.

இந்த இசைவெளியீட்டு நிகழ்வில் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீகணேஷ், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உட்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்