பேபி – விமர்சனம்

எத்தனையோ பேய்ப்படங்கள் வந்திருந்தாலும் அதில் இந்த ‘பேபி’ ஒரு புதுவிதமான படம்.

கணவன் மனோஜை விட்டு தனியாக தனது குழந்தை அதிதியுடன் வசிக்கிறார் ஷிரா. தனக்கு குழந்தை பிறந்த அதேசமயம், இன்னொரு பெண்ணும் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு இறந்த்போக, அந்த குழந்தையையும் எடுத்து வளர்ப்பதால் ஏற்படும் மனஸ்தாபத்தில் தான் கணவனை விட்டு பிரிகிறார் ஷிரா.

ஒருகட்டத்தில் ஷிராவுக்கு அதிதி தான் பெற்ற மகள் அல்ல என்றும், தான் பெற்ற மகளான அவந்திகா மனோஜிடம் வளர்கிறாள் என்றும் தெரியவருகிறது. ஆனால் மனோஜ் எந்த சந்தர்ப்பத்தில் தான் அப்படி செய்ய நேரிட்டது என்பதை விளக்கவே, சமாதானமாகும் ஷிரா, இரண்டு குழந்தைகளையும் சமமாக பாவித்து வளர்க்க தொடங்க, மீண்டும் குடும்பம் ஒன்று சேர்க்கிறது.

ஆனால் இறந்துபோன பெண் (அஞ்சலி ராவ்) தனது மகளை பார்க்க பேயாக மாறி ஷிராவின் அபார்ட்மென்ட்டிலேயே சுற்றுகிறது. தனது குழந்தையான அதிதியின் கண்களுக்கு மட்டும் சாந்த சொரூபம் காட்டும் பேய், ஷிராவின் உண்மையான மகளான அவந்திகாவை அவ்வப்போது குரூர முகம் காட்டி மிரட்டுகிறது. காரணம் அவந்திகா வந்தபின்பு ஷிராவிடம் தனது மகளுக்கான முக்கியத்துவம் குறைவதாக நினைப்பதால் தான்.

ஒரு சூழலில் மனோஜுக்கு அங்கே பேய் இருப்பது தெரியவருகிறது, ஆனால் ஷிராவோ அதை நம்ப மறுக்கிறார். மீண்டும் சர்ச்சை ஏற்பட அவந்திகாவை அழைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கே செல்கிறார் மனோஜ்.. குழப்பமான மனநிலையில் தனியாக இருக்கும் ஷிராவுக்கும் ஒரு கட்டத்தில் பேய் தட்டுப்பட, மீண்டும் மனோஜின் உதவியை நாடுகிறார்.

அந்த தத்துக்குழந்தை அதிதி தங்களிடம் இருப்பதால்தான் அந்த பேய் அங்கே சுற்றி வருகிறது, அதனால் அதை ஆனாதை ஆசிரமத்திலேயே விட்டுவிடலாம் என்கிறார் மனோஜ். ஆனால் வளர்த்த பாசத்தால் அதிதியை விட மறுக்கிறார் ஷிரா. தனது மகளின் மீது ஷிரா உண்மையான அன்பை வைத்திருப்பதை அந்த பேய் புரிந்துகொள்வதற்குள் நிலைமை கைமீறி போய்விடுகிறது. என்ன நடந்தது என்பது மனம் கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

மனோஜை பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் மனோஜ் இவ்வளவு அற்புதமான நடிகரா என தனது அலட்டல் இல்லாத, நிதானமான நடிப்பால் ஆச்சர்யப்பட வைத்துவிடுகிறார். கதாநாயகி ஷிரா அந்த கேரக்டராகவே தான் நமக்கு தென்படுகிறார். சொந்த குழந்தைக்கும் ததுத்து குழந்தைக்கும் இடையில் அவர் அல்லாடுவதும், அவர்களை பேலன்ஸ் பண்ண சிரமப்படுவதும் என தாய்மைக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ஷிரா.

சுட்டிக்குழந்தைகளான அதிதி (பேபி ஸ்ரீவர்ஷினி) மற்றும் அவந்திகா (பேபி சதன்யா) இருவரும் தங்களது சுட்டித்தனத்தால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்கள் என்றாலும், இருவரில் அதிதிக்குத்தான் விதவிதமான பாவனைகளை வெளிப்படுத்தும் சவாலான பாத்திரம்.. அதில் மிரட்டி தள்ளுகிறார் அதிதி. குறிப்பாக நமது கண்களுக்கு கூட தெரியாத பேயிடம், அது இருப்பதாக பாவித்து சமிக்ஞை காட்டுவது சூப்பர்.

பேயாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், பேயாக மிரட்டுவதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். அதைவிட அவருக்கு பிட்ஸ் வந்து இறந்துபோகும் காட்சியில் அவர் நடிப்பு செம உக்கிரம். பேயாக வந்து மகளுக்கு பாச முகம் காட்டுவதும், இன்னொரு குழந்தையை பயமுறுத்துவதும் என தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

ஒரு திகில் படத்துக்குண்டான கச்சிதமான ஒளிப்பதிவை தந்திருக்கும் ஜோன்ஸ் ஆனந்த் முதல் ஆளாக பாராட்டப்பட வேண்டியவர். பின்னணி இசையில் சதீஷ்-ஹரீஷ் கூட்டணியும் தலைமுடியை நட்டுக்கொள்ள வைக்கின்றனர். ஒரு பேய்ப்படத்திற்கு தேவையான பயத்தை சரியான சதவீதத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் டி.சுரேஷ்.