பாகுபலி – விமர்சனம்

அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த பாகுபலி ஆர்ப்பாட்டமாக ரிலீஸ் ஆகிவிட்டது. தமிழ் ரசிகர்களுக்கு தனது முந்தைய இரண்டு பிரமாண்டமான படங்களால் தேவைக்கதிகமாகவே தீனி போட்ட ராஜாமவுலி, இந்த ‘பாகுபலி’யையும் அன்லிமிடேட் மீல்ஸாக கொடுத்திருக்கிறாரா..? பார்க்கலாம்.

குழந்தையுடன் தப்பிக்கும் ரம்யா கிருஷ்ணனை எதிரிகள் துரத்த, தண்ணீரில் குதித்து தப்பிக்க முயல்கிறார். ஆற்றோர கிராமத்தை சேர்ந்த ரோகிணியால் குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. குழந்தையில்லாத அவர் அவனை வளர்த்து வாலிபனாக்குகிறார்.

வாலிபன் பிரபாசுக்கு எப்போதும் அவன் கிராமத்தருகே இருக்கும் அருவி மீது, அருவிக்கு மேல் உள்ள மலை மீது என்ன இருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் அதிகம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் மலைமேல் பாசறை அமைத்திருக்கும் புரட்சிப்படையை சேர்ந்த தமன்னாவை கண்டு, அவர்மீது காதல் கொள்கிறார்.

தமன்னாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக, அதே மலையில் உள்ள மகிழ்மதி நாட்டில் கொடுங்கோல் மன்னன் ராணாவால் சிறையில் அடைபட்டிருக்கும் அவர்களது ராணியான அனுஷ்காவை மீட்டுவர செல்கிறார்.. எதிரிகளுடன் மோதி அனுஷ்காவை காப்பற்றி வரும் வழியில் ராணாவின் அடிமையும் படைத்தளபதியுமான சத்யராஜ் வழிமறித்து தாக்க முயல்கிறார்.

ஆனால் பிரபாஸின் உருவத்தை பார்த்ததும் அதிர்ச்சியாகும் சத்யராஜ், அவர்தான் அனுஷ்காவின் மகன் என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறார். அப்படியானால் பிரபாஸ் உண்மையில் யார், அனுஷ்காவை ராணா சிறைவைக்க காரணம் என்கிற பிளாஸ்பேக் இடைவேளைக்குப்பின் விரிகிறது. அதில் துரோகத்துக்கு பலியான தனது தந்தை ‘பாகுபலி’யின் வரலாற்றை அறிந்து கொள்ளும் பிரபாசுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் சொல்கிறார் சத்யராஜ். நடந்த துரோகம் என்ன, அது யாரால் நடத்தப்பட்டது என்பதெல்லாம் க்ளைமாக்ஸ்.. அல்ல… அடுத்து வெளிவர இருக்கும் இரண்டாம் பாகத்தில்..

படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்கும் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு கச்சிதமான கதாபாத்திரத்தை இயக்குனர் ராஜமவுலி கொடுத்திருக்கிறார். வெள்ளந்தி வாலிபனாகவும் நாட்டின் மானம் காக்கும் மாவீரனாகவும் இருவித கதாபாத்திரங்களில் பளிச்சிடுகிறார் பிரபாஸ். குறிப்பாக இவர் மலையேறும் காட்சிகளில் எல்லாம் நம் உடம்பு மெய்சிலிர்க்கிறது.

அதுமட்டுமில்லாமல், போர் புரியும் காட்சிகளிலும், போர்க்களத்தில் யுத்த தந்திரங்களை பயன்படுத்தி எதிரிகளை அழிக்கும்போதும் ஆக்ரோஷத்துடன் மாவீரன் பாகுபலியாகவே மாறியிருக்கிறார் பிரபாஸ். வில்லனாக வரும் ராணாவுக்கும், பிரபாஸுக்கு சரிசமமாக போட்டி போடும் அளவுக்கு முகத்தில் கொடுரம் கொப்பளிக்கும் வேடம். அந்த பல்லாலதேவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ராணா.

அழகு தேவதையாக வலம் வரும் தமன்னா, ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகளில் ஆச்சர்யமூட்டி, பிரபாஸின் காதலால் உருகும் காட்சியில் மெல்லிய புன்னகையை வரவழைக்கிறார். அனுஷ்காவிற்கு இந்த முதல் பாகத்தில் பெரிதாக வேலையில்லை.. எதிரியால் சிறைப்பட்டு, மகன் வந்து காப்பாற்றுவான் என காத்திருக்கும் தாயின் வேடம் தான் என்றாலும் வயதான மேக்கப் போடு அழுக்கு சேலையுடன், கையில் இரும்பு சங்கிலியுடனும் அனுஷ்காவை பார்க்கும்போது கிரேட் என்றே சொல்லத்தோன்றுகிறது.

ராணாவின் தந்தையாக ஒரு கை விளங்காத மாற்றுத்திறனாளியாக தனக்கே உரித்தான சகுனித்தனமான வில்லன் வேடத்தில் வரும் நாசர், போர்ப்படை தளபதியாக அதேசமயம் விசுவாச அடிமையாக வரும் சத்யராஜ் இருவரும் தங்களது அடையாளங்களை தொலைத்து அந்த கதாபாத்திரங்களாகவே மாறிப்போய் விட்டார்கள்.

குறிப்பாக ராணாவுக்கு விசுவாச அடிமையாகவும், ஆனால் அவரிடம் சிறைப்பட்டிருக்கும் ராணியை காப்பற்ற துடிப்பவராகவும் மாறுபட்ட நடிப்பில் கவர்கிறார் சத்யராஜ்.. கிட்டத்தட்ட படத்தில் மூன்றாவது முக்கிய கதாபாத்திரம் இவருடையது. ‘படையப்பா’வுக்கு பிறகு மிகவும் வலிமை பொருந்திய கதாபாத்திரத்தில் வந்து அசத்தலான நடிப்புடன் மிரட்டலான வசனமும் பேசும் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தை மிகவும் மெச்சியே ஆகவேண்டும்.

ராஜமவுலி படம் என்றாலே பிரமாண்டமும் அதற்கேற்றாற்போல விறுவிறுப்பான திரைக்கதையும், ரசிகர்களால் கற்பனை செய்ய முடியாத நிறைய விஷயங்களும் நம்மை இருக்கை நுனியிலேயே அமர வைத்திருக்கும். அந்த நம்பிக்கையை இந்தப்படமும் வீணாக்கவில்லை., எந்தவொரு கதாபாத்திரத்தையும் யாரும் குறை சொல்லமுடியாத அளவுக்கு அழகாக கையாண்டிருக்கிறார்.

படத்தில் பிரம்மாண்டமாக தோன்றும் ஒவ்வொன்றும் கிராபிக்ஸ் காட்சிகள்தான் என்றாலும், அது தெரியாத அளவுக்கு தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார். அதிலும் புரியாத பாஷை பேசும் காளகேய நாட்டு வீரர்களுடன் மோதும் அத இருபது நிமிட போர் காட்சிகள் ரசிகர்களுக்கு செமத்தியான தீனி. அதுமட்டுமல்ல பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். இன்னும் பல விஷயங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைத்தாலும் அவற்றை இங்கே முழுவதுமாக சொல்லி விடமுடியாது…

கீரவாணியின் பின்னணி இசையும். செந்தில்குமார் ஒளிப்பதிவும் நம்மை கதை நடக்கும் காலகட்டத்திற்கே இட்டுச்செல்கின்றன. இரண்டாம் பாகத்துக்கான ஆவலை படம் முடியும்போதே தூண்டிவிட்டிருப்பதில் தான் ராஜமவுலியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது.