அவள் – விமர்சனம்

சித்தார்த்-ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகியுள்ள ஹாலிவுட் பாணியிலான ஹாரர் படம் தான் ‘அவள்’ திரைப்படம். இது வழக்கமான பேய்ப்படமா..? அல்லது ஹாலிவுட் லெவலில் நம்மை அலறவைக்கும் ஹாரர் படமா என்பதை பார்க்கலாம்..

ஹிமாச்சல பிரதேசம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் சித்தார்த், அங்கே தனது காதல் மனைவி ஆண்ட்ரியாவுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார்.. அவருக்கு எதிர்வீட்டில் என்ஜீனியர் அதுல் குல்கர்னியின் குடும்பம் குடி வருகிறது. அவர்கள் வந்த சில நாட்களில் இருந்தே சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கின்றன.

அதுல் குல்கர்னியின் மூத்த மகள் ஜெனி விசித்திரமான நடந்துகொள்ள ஆரம்பிக்கிறாள்.. மனோதத்துவ டாக்டரான சுரேஷ் தனது சிகிச்சை மூலம், ஜெனி ஆவிகள் குறித்து அதிகம் படித்ததால் ஸ்பிலிட் பர்சனாலிட்டிக்கு ஆளாகி இருப்பதாக சொல்கிறார்.. ஆனால் அந்த பகுதியை சேர்ந்த பாதிரியார் ஜெனி அவ்வப்போது பேயின் பிடியில் சிக்குவதை அறிகிறார். அனால் அதை தடுக்கும் முயற்சியில் பேயின் தாக்குதலுக்கு ஆளாகி கோமாவுக்கு போகிறார்.

இந்தநிலையில் ஒரு யாத்ரீகரை வரவழைக்கிறார்கள்.. அவர், அந்த வீட்டில் இருக்கும் இரண்டு ஆவிகள் அதுல் குல்கர்னியின் குடும்பத்தை அந்த வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதையும் இன்னொரு ஆவி அவர்களை வெளியேறவிடாமல் தடுப்பதையும் அறிகிறார்..

இது என்ன புதுமாதிரியான சிக்கல், எதனால் ஆவிகள் இரண்டுவிதமாக நடந்துகொள்கின்றன..? இந்த சிக்கலில் இருந்து அவர்களால் எப்படி மீள முடிந்தது..? இதில் ஆண்ட்ரியா, சித்தார்த் இருவரும் எப்படி சம்பந்தப்படுகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை..

பேய்ப்படங்களுக்கு என்றும் அழிவில்லை என ஒரு பக்கம் சொன்னாலும் கூட, பேய்ப்படங்கள் குறுகிய எல்லைகளில் தான் தங்களது வெற்றியை தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. அதில் முக்கியமானது பேய்களுக்கான பிளாஸ்பேக் வித்தியாசமாக இருக்கவேண்டும்.. அதுதான் வெற்றியை உறுதிசெய்யும்.. அப்படி ஒரு வலுவான ‘பேய்ப்பின்னணி’யுடன் இந்த ‘அவள்’ படம் வெற்றிக்கான சகல அம்சங்களுடனும் வெளியாகியுள்ளது.

ஒரு அழுத்தமான வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த்துக்கு இந்தப்படம் நம்பிக்கை கொடுத்துள்ளது. டாக்டர் கேரக்டரில் இயல்பாக பொருந்தியுள்ள அவர், பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிப்பில் துடிப்பு காட்டியுள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ரொம்பவே ரிஸ்க் எடுத்துள்ளார் சித்தார்த்.

ஆண்ட்ரியா இறங்கி அடித்திருக்கிறார். சித்தார்த்துடன் அவர் லிப் கிஸ் காட்சிகளில் காட்டும் ரொமான்ஸ், ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுகிறது. அதுல் குல்கர்னி, சுரேஷ் ஆகியோர் கதையுடன் பயணிக்கும் கனமான கதாபாத்திரங்கள்.. அதுல் குல்கர்னியின் மகளாக ஜெனி கேரக்டரில் வரும் அனிஷா விக்டர் தனது நடிப்பால் நம்மையும் சேர்த்து மிரட்டுகிறார்.

பேய் பற்றிய பிளாஸ்பேக் காட்சிகளும் அதை காட்சிப்படுத்திய விதமும் மிகவும் நேர்த்தி.. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கிரிஷின் பின்னணி இசையும் படத்தை ஹாலிவுட் தரத்திலான தமிழ்ப்படமாக மாற்றி இருக்கின்றன. படத்தில் பத்து இடங்களுக்கும் குறைவில்லாமல் ரசிகர்களை பயமுறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மிலிந்த் ராவ். குறிப்பாக க்ளைமாக்ஸில் வைத்த அந்த ட்விஸ்ட் உண்மையிலேயே எதிர்பாராத ஒன்று.

நீண்ட நாளைக்குப்பிறகு மிரட்டலான ஒரு ஹாரர் படம் பார்த்த திருப்தியை தருகிறது ‘அவள்’..!