அதிதி – விமர்சனம்


மலையாளத்தில் வெளியான ‘காக்டெயில்’ படத்தை தமிழில் அதிதியாக மாற்றியிருக்கிறார்கள்..

கோடிகள் புழங்கும் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி நந்தா. அவரது காதல் மனைவி அனன்யா.. தனது நிறுவனத்திற்கு எதிராக சதி செய்யும் மூவரின் பதவி பறிபோக காரணமாகிறார் நந்தா. ஒருநாள் குழந்தையை வீட்டு வேலைக்காரியிடம் விட்டுவிட்டு நந்தாவும் அனன்யாவும் காரில் கிளம்புகிறார்கள். வழியில் தன் கார் ரிப்பேராகி விட்டது என லிஃப்ட் கேட்டு ஏறுகிறார் நிகேஷ் ராம்.

ஆனால் சில நிமிடங்களிலேயே துப்பாக்கி முனையில் இருவரையும் மிரட்டி அவர்களது குழந்தை தன் வசம் இருப்பதாகவும் தான் சொல்லும்படி நடக்காவிட்டால் குழந்தையை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். அதிர்ச்சையடைந்த நந்தாவும் அனன்யாவும் வேறுவழியின்றி அவர் சொன்னபடி கேட்கிறார்கள்.

இரண்டுமுறை அவரிடமிருந்து இருவரும் தப்ப முயற்சித்து அவை தோல்வியில் முடிகின்றன. நிகேஷ்ராம் நந்தா செய்ய மறுக்கும் பல காரியங்களை மிரட்டி செய்யச்சொல்ல வேறு வழியின்றி குழந்தைக்காக  அவற்றை செய்து முடிக்கிறார். அன்றைய நாளின் இறுதியில் நந்தாவை அவர் கம்பெனியில் வேலைபார்க்கும் பெண்ணின் வீட்டில் இறக்கிவிடும் நிகேஷ்ராம், அவளை கொன்றால் தான் குழந்தை உயிருடன் கிடைக்கும் என மிரட்டுகிறார்.

நிகேஷ்ராம் இப்படி திடீரென ஒரு கொலையை அதுவும் நந்தாவின் தோழியையே கொல்லச்சொன்னது ஏன்? தன் குழந்தையின் மீதுள்ள பாசத்தால் நந்தா தனது தோழியை கொன்றாரா? இல்லை நிகேஷ்ராமிடமிருந்து நந்தா, அனன்யா இருவரும் தப்பித்தார்களா? பரபரப்பான விடை சொல்லியிருக்கிறது க்ளைமாக்ஸ்.

சிக்கலில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளிவர போராடும் கதாபாத்திரம் ஏற்கனவே நந்தாவுக்கு பழக்கமானதால் அதில் இயல்பாக பொருந்தி விடுகிறார். தன் குழந்தையை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் ஏற்படும் பதட்டம், ஆத்திரம் தன் மனைவி மீது நிகேஷ்ராம் கைவைக்கும்போது ஒன்றும் செய்யமுடியாத இயலாமை, நிகேஷ்ராம் உத்தரவுப்படி விலைமாதுவை அழைக்கும்போது அவளிடம் கெஞ்சுதல் என அவரது காட்சிகளில் அவர் பங்கை நியாயப்படுத்தி இருக்கிறார்.

அனன்யா மட்டும் சளைத்தவரா என்ன? வெட்கம், சிரிப்பு, கோபம், ஆற்றாமை. பதட்டம் என அத்தனையையும் முகத்தில் நொடிக்கொரு தரும் மாற்றுகிறார். க்ளைமாக்ஸில் அனன்யா யூ டர்ன் அடிப்பது எதிர்பாராதது.

மிரட்டல் வில்லனாக நிகேஷ்ராம்.. எங்கேயிருந்து பிடித்தார்கள் இவரை..? அற்புதமான தேர்வு. பத்தாவது மாடி கைப்பிடிச்சுவரில் உட்கார்ந்து தண்னியடித்துவிட்டு அதன் திட்டிலேயே தடுமாறி நடக்கும் காட்சியிலேயே தன் மீது வில்லச்சாயத்தை பூசிக்கொள்கிறார்.

திட்டமிட்டு குழந்தையை கடத்துவது, நந்தா, அனன்யா இருவரும் தன்னிடம் இருந்து தப்பிவிடாமல் ஒவ்வொரு முறையும் செக் வைக்கும் வில்லத்தனம் என பொளந்துகட்டும் நிகேஷ்ராம், கடைசிக்காட்சியில் தனது செயலுக்கு நியாயம் உண்டாக்கி ஹீரோவாக உயர்ந்துவிடுகிறார்.

நந்தாவின் மாமாவாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் தம்பி ராமையா நந்தாவின் இக்கட்டான சூழல் தெரியாமல் அவரிடம் வந்து சேர்வதும், இந்த களேபரத்தில் திடீரென அவரை நந்தா கழட்டிவிட, வேறு வழியில்லாமல் சுற்றி அலைந்து மீண்டும் அன்றிரவே ஊருக்கே திரும்புவதும் என சீரியாஸாக செல்லும் கதையில் காமெடி தண்ணீர் பந்தல் அமைத்திருக்கிறார்,. டாஸ்மாக் சரக்கு மற்றும் ஆம்னி பஸ் நிர்வாகம் இரண்டையும் போகிற போக்கில் கிண்டலடிக்கவும் தவறவில்லை.

ஜெய்யின் ஒளிப்பதிவும் பரத்வாஜின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு திகில் சேர்க்கின்றன. மலையாளத்தில் இருந்து வாங்கிய கதையை அப்படியே சிதைக்காமல் அழகாக தந்திருக்கிறார் ‘அழகிய தமிழ்மகன்’ புகழ் இயக்குனர் பரதன். படத்தின் இறுதிவரை நிகேஷ்ராம் செய்யும் அடாவடிகள் எல்லாவற்றையும் ரசிகர்களை யூகிக்க விடாமல், இரண்டு மணி நேரமும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் பரதன்.

தம்பி ராமையா நிகேஷ்ராமை பற்றி சொல்லும் விபரங்கள் மட்டும் வலிந்து திணிக்கப்பட்டவை மாதிரி இருக்கிறது. அதேபோல தன்னை பாரில் வைத்து மிரட்டும் ஒரு ரவுடியை செல்போனில் ஒரு கால் மூலமாக அடக்கும் நந்தா நிகேஷ்ராம் விஷயத்தில் அப்படி ஒரு மூவ் எடுத்திருக்கலாமே என்கிற எண்ணமும் ஏற்படுகிறது. ஆனால் க்ளைமாக்ஸில் இன்றைய சமூகத்தை பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை சொல்லி அதற்கு தீர்வாக படத்தின் மூலம் வித்தியாசமான அதிர்ச்சி வைத்தியமும் கொடுத்திருக்கிறார் பரதன், அதற்காக அவரை தாராளமாக பாராட்டலாம்.