அதே கண்கள் – விமர்சனம்

Adhe-Kangal review

கண் பார்வையற்ற கலையரசன் சொந்தமாக ரெஸ்டாரன்ட் வைத்து நடத்தி வருகிறார்.. அவரது தோழியான ஜனனி ஐயருக்கு கலையரசன் மீது பிரியம் என்றாலும், கலையரசனுக்கோ தனது ரெஸ்டாரன்ட் தேடி வந்து, தன்னை சந்தித்து பேசும் ஷிவதா நாயர் மீது தான் காதல். தனது தந்தை தன் அக்காவின் திருமணத்துக்கு வாங்கிய கடனுக்காக, தங்களை கடன்காரர்கள் துன்புறுத்துவதாகவும், பணம் தர இரண்டு நாட்கள் மட்டுமே கெடு கொடுத்துள்ளதாகவும் கூறி அழுகிறார் ஷிவதா.

அவரது கடனை அடைப்பதற்கு உதவி செய்வதாக கூறும் கலையரசன் அன்றைய இரவே கார் விபத்தில் சிக்குகிறார். சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்பதுடன், அவருக்கு மீண்டும் கண்பார்வை கிடைப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக சொல்லவே ஆபரேஷன் முடிந்து கலையரசனுக்கு வெற்றிகரமாக பார்வையும் திரும்புகிறது. ஆனால் அதற்குள் மூன்றுவாரங்கள் ஓடி விடுகின்றன..

இந்த இடைப்பட்ட நேரத்தில் ஷிவதாவுக்கு என்ன ஆச்சோ என பதறியபடி தேட ஆரம்பிக்கிறார் கலையரசன்.. ஆனால் எந்த தகவலும் கிடைக்காமல் போகவே, சில நாட்களில் மனம் மாறி ஜனனியை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.. திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கையில் ஒருநாள் கலையரசனை தேடிவரும் ஷிவதாவின் தந்தை தனது மகளை கடன்காரர்கள் பிடித்துவைத்து சித்தரவதை செய்வதாக கூறுகிறார்.

திருமணத்திற்காக ஜனனிக்கு வாங்கி வைத்திருந்த நகைகளை கொடுத்து ஷிவதாவை மீட்க கிளம்புகிறார் கலையரசன். ஆனால் கலையரசனை தாக்கிவிட்டு, ஷிவதாவின் தந்தையையும் கொன்றுவிட்டு, ஷிவதாவையும் கடத்திக்கொண்டு செல்கிறான் எதிரி.. இது நடந்த சில நாட்களில் கன்னியாகுமரியில் ஷிவதாவின் தந்தை கார்விபத்தில் இறந்ததாக செய்தியில் பார்க்கும் கலையரசன் அதிர்ச்சியாகிறார்.

தனது கண் முன்னால் கொல்லப்பட்ட ஷிவதாவின் தந்தை கன்னியாகுமரியில் இறந்தது எப்படி சாத்தியம் என்பது குறித்து விபரம் அறிவதற்காக கன்னியாகுமரி செல்லும் கலையரசனுக்கு பல அதிர்ச்சிகரமான செய்திகள் தெரிய வருகின்றன. ஷிவதா யார், அவர் என்னவானார், ஷிவதாவை கலையரசன் மீட்டாரா, ஜனனியின் காதல் என்ன ஆனது எனது பரபரக்க விடை சொல்கிறது மீதிக்கதை.

கலையரசனுக்கு இந்தப்படத்தில்தான் ஒரு முழுமையான கதாநாயகன் என்கிற அந்தஸ்து கிடைத்துள்ளது. கோபம், செண்டிமெண்ட், லைட்டான ஆக்சன் என கமர்ஷியல் பார்முக்குள் கச்சிதமாக உள்ளே நுழைந்திருக்கிறார். கண் தெரியாத காட்சிகளில் சோடையில்லாத நடிப்பை வழங்கி ஆச்சர்யப்படுத்துகிறார்.

இரண்டு கதாநாயகிகளில் அதிரடியான நடிப்பால் முதலிடத்தை ஜஸ்ட் லைக் தட் தட்டிச்செல்கிறார் ஷிவதா நாயர்…. அவரது கேரக்டர் பற்றி சொன்னால் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்துவிடும். அதனால் படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.. ஜனனி ஐயரும் எந்த குறையும் வைக்கவில்லை.. கலையரசன் தன்னை ஒதுக்குவது கண்டு கோபப்படுவதும் பின்னர் அவருக்கு உதவியாக களத்தில் இறங்குவதும் என பரபரப்பாக இயங்கியிருக்கிறார்.

கான்ஸ்டபிளாக வரும் பாலசரவணன் கிட்டத்தட்ட படத்தின் இன்னொரு ஹீரோவாகவே படம் முழுவதும் பயணிக்கிறார்.. அளவான காமெடியுடன் கலையரசனுக்கு ஆதரவாக துப்பறிவது என அசத்துகிறார்.. ஷிவதாவுக்கு உதவியாக வரும் லிங்கா மற்றும் இயக்குனர் அரவிந்தராஜ் உட்பட மற்ற கதாபாத்திரங்களும் கேரக்டரின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பாடல்களில் கவனத்தை குறைத்து, பின்னணி இசையில் அதிரவிட்டிருக்கிறார் ஜிப்ரான். ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவில் சென்னையின் இரவுக்காட்சிகளும் கன்னியாகுமரி சம்பந்தப்பட்ட படமாக்கலும் அருமை. ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லருக்குண்டான அத்தனை அம்சங்களும் படத்தில் இருக்கின்றன.

படம் ஆரம்பித்தில் இருந்து முடியும்வரை எந்தவித தொய்வும் இல்லாமல் ஆனால் காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு கதையை நகர்த்தி நம்மை இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன். ஆக முதல் படத்திலேயே வெற்றிக்கனியையும் பறித்திருக்கிறார்..

சி.வி.குமார் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் என்றாலே சோடை போகாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.