அசுரனுக்கு தேசிய விருது ; இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லி கொண்டாடிய படக்குழு


2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர், வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் வீடியோ காலி பேசி தனது நன்றியை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “இன்றைய சூழலில் வெற்றிமாறனை அறிமுகப்படுத்தியது தனுஷ் தான். வருங்கால இயக்குநர்கள் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். ஒரு கட்டத்தில் வெற்றிமாறம் என்னிடம் சார் இந்தப்படத்திற்காக வாங்கிய பணத்தை தந்துவிடுகிறேன் என்று சொன்னார். தேதி குறிப்பிட்ட பின் அவர் தன்னை வருத்தி வேலை செய்தார். அவரிடம் இருக்கும் உழைப்பு தான் அவரை உயர்த்துகிறது. படத்தின் எடிட்டிங் நேரத்தில் அவருக்கு சிக்கன்குணியா நோய் வந்துவிட்டது. ஆனாலும் அதைத்தாங்கிக் கொண்டு வேலை செய்தார். அவரின் இலக்கு பணமல்ல வெற்றி தான். அதுக்குத் தான் அவருக்கு வெற்றிமாறன் என்ற பெயர். வெற்றிமாறனின் உழைப்புக்கு நான் என்றும் உதவியாக உறுதுணையாக இருப்பேன்” என்று பாராட்டினார்.

வெற்றிமாறன் பேசும்போது, “ஒரு படம் பண்னும்போது அந்தப்படத்தோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு மேடை கிடைக்கும். ஆனால் எங்களுக்கு ரெண்டு மேடை கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் சமூகநீதிக்கான ஒரு உரையாடல் இருந்தது .மீடியா இந்தப்படத்தை கொண்டு சேர்த்தது. வணிக வெற்றிக்கு மீடியா ஒத்துழைப்பு கொடுத்தது. ஒரு படம் நல்லா வரும்னா அது தனக்கு வேண்டிய ஆட்களை தானே சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

அந்தவகையில் எனக்கு கிடைக்கும் நடிகர்கள் எல்லாருமே எனக்கு கிடைத்த கிப்ட். கென் தான் இந்தக்கதைக்கு முதல் தொடக்கம். சிவசாமிக்காக கூட ரெண்டு மூனு பேரிடம் போய்..அதன்பின் தான் தனுஷ் வந்தார். கென்னை தனுஷ் நன்றாக ஊக்கப்படுத்தினார். மஞ்சுவாரியார் தனது நடிப்பால் இந்தப்படத்தை குடும்பத்திற்கான படமாக மாற்றினார். தனுஷ் எப்போதும் போல என்னை நம்பி நடித்தார். தனுஷிடம் கதை சொன்னதும் அவர் யார் மகன் கேரக்டர் என்று கேட்டார். அதுவே ஆச்சர்யமாக இருந்தது. தாணு சார் இந்த கதையை நாலுபக்கம் படித்துவிட்டு ஓ.கே பண்ணுவோம் என்றார். தாணு சார் இந்தப்படத்திற்கு கிடைத்தது தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு போனதற்கு கிடைத்தது” என்றார் .

வீடியோ கால் மூலமாக தனுஷ் பேசும்போது, “ரொம்பச் சந்தோசமா இருக்கு. எனக்கு மீடியா தொடர்ந்து கொடுக்குற சப்போர்ட்டுக்கு நன்றி. அசுரன் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கு. தாணு சார் வெற்றிமாறனுக்கு ரொம்ப நன்றி” என்றார்.