அசுரகுரு – விமர்சனம்

கூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில் வேலை பார்க்கும் அவரது நண்பன் ஜெகனும் உடந்தை. ஆனால் கொளையடித்த பணத்தை வைத்து யாருக்கும் உதவி செய்யாமலும் அதே சமயம் தனக்கென ஒரு பைசா செலவு செய்யாமலும் சேர்த்து வைக்கிறார்.

ஒருபக்கம் போலீஸ் அதிகாரி இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து விசாரிக்கிறார். இன்னொரு பக்கம் தனது பணத்தை பறிகொடுத்த ஹவாலா ஏஜென்ட் நாகிநீடு டிடெக்டிவ் ஏஜென்ட் மஹிமாவின் உதவியை நாடுகிறார். போலீஸ் விக்ரம் பிரபுவை நெருங்கும் முன்பே அவரை கண்டுபிடிக்கும் மஹிமாவுக்கு விக்ரம் பிரபு பற்றி பிளாஸ்பேக் தெரியவருகிறது.

கடைசி நேரத்தில் மனம் மாறி விக்ரம் பிரபுவை தப்ப வைக்கிறார் மகிமா. ஆனால் நாகிநீடுவும் போலீஸ் அதிகாரியும் இருபுறமும் சேர்ந்து விக்ரம் பிரபுவை நெருங்குகிறார்கள்.. போலீசுக்கு உதவி செய்வதாக ஒரு ஒப்பந்தம் செய்து மிகப்பெரிய ரிஸ்க்கான வேலை ஒன்றில் இறங்குகிறார் விக்ரம் பிரபு.. அந்த ரிஸ்க்கான வேலை என்ன..? அதை செய்து முடித்தாரா..? போலீஸ் அதிகாரி அவரை ப்ரீயாக விட்டுவிட்டாரா..? நாகிநீடுவின் கையிலிருந்தும் விக்ரம் பிரபு தப்பித்தாரா..? இவ்வளவு பணத்தை விக்ரம் பிரபு கொளையடிக்க வேண்டிய தேவை என்ன என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.,.

அட என ஆச்சரய்ப்பட வைக்கிற கதை.. திரைகதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் ஹிட் என்கிற அந்தஸ்த்தை பெற்றிருக்க வாய்ப்பும் இருந்திருக்கும். விக்ரம் பிரபுவுக்கு சுபாவப்படி இறுக்கமான கேரக்டர் என்பதால் அவரது நடிப்பு வேலை இதில் ரொம்பவே எளிதாகி இருக்கிறது. சாகச காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் சபாஷ் பெறுகிறார்.

ஜாடிக்கேத்த மூடியாக மஹிமா நம்பியார். டிடெக்டிவ் ஏஜென்ட்டாக ஆரம்பத்தில் நம்ப முடியவில்லை என்றாலும் போகப்போக ஆச்சர்யம் காட்டுகிறார். நண்பனாக நண்டு ஜெகன். சிரிக்கவும் வைக்கிறார்.. சீரியஸாகவும் நடித்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் யோகிபாபுக்கென எந்த ட்ரேட் மார்க் சிரிப்பு காட்சிகளும் இல்லை..

போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட் யூகிக்க முடியாத ஒன்றுதான். விக்ரம் பிரபுவின் திருட்டுக்களை நியாயப்படுத்துவதை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடிகிறது. திருட்டுக்களை விக்ரம் பிரபு சர்வசாதாரணமாக செய்க்கிறாரே தவிர அதில் அசுரத்தனம் எதுவும் இருப்பதாக இயக்குனர் ராஜ்தீப் எங்கேயும் காட்டவில்லை.