அருவி – விமர்சனம்

நல்ல மழையாக சில படங்கள் வராதா என வானம் பார்த்த பூமியாக, ஏங்கி கிடக்கும் தமிழ்சினிமாவில் சீசன் தப்பிவந்தாலும், சிகரத்தை தொட்டுள்ள படமாக வெளியாகியுள்ள படம் தான் இந்த அருவி..

சாதாரண, சராசரி ஆசைகளுடன் கனவுகளுடன் வலம்வரும் ‘அருவி’ என்கிற ஒரு பெண்ணை, திடீரென தாக்கும் எதிர்பாராத சூழல் நிலைகுலைய வைக்கிறது. கைகொடுத்து ஆறுதல் தரவேண்டிய வேண்டிய பெற்றோரும் இந்த சமுதாயமும் சேர்ந்து போலித்தனமான ‘அறம்’ பேசினால், பாதிக்கப்பட்ட அந்த பெண் தனக்கான நியாயத்தை எப்படித்தான் பெறுவாள்..? அப்படி ஒரு பெண்ணின் உணர்வுகளை ‘அருவி’யாக கொட்டியுள்ளது இந்தப்படம்.

அருவியாக நடித்துள்ள அதிதி பாலனை அறிமுக நடிகை என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. மொத்தப்படத்தையும் தாங்கிப்பிடிக்கும் தூணாக அவரது கேரக்டர் வடிவமைப்பும் யதார்த்தம் மீறாத அவரது இயல்பான நடிப்பும் படம் பார்த்து முடியும்போது நம்மையும் அறியாமல் நம் கண்களில் அருவி கொட்ட வைத்திருக்கிறது. கெட்டுப்போனவள் என்பதற்கு இந்த சமுதாயம் கொடுக்கும் அர்த்தமும் பார்வையும், அதிலிருந்து கடைசிவரை மீளவே முடியாத துயரத்திற்கு ஆளான பெண்ணின் மனநிலையும் எப்படி இருக்கும் என்பதை இதைவிட மேலதிகமாக பதிவு செய்துவிட முடியாது. அதிலும் இடைவேளைக்கு முன் அவர் பேசும் மிக நீண்ட வசனம் இந்த அருவியையும் அதிதியையும் நம் மனதில் நீண்ட நாட்கள் நிலைக்க வைத்திருக்கும்.

அருவியின் அப்பா, அடைக்கலம் கொடுக்கும் திருநங்கை அஞ்சலி வரதன், ரியாலிட்டி ஷோ இயக்குனர் கவிதா பாரதி, அதை நடத்தும் லட்சுமி கோபால்சாமி, போலீஸார் என படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இந்த சூழல் சார்ந்து தாங்கள் இயங்கவேண்டிய நிர்ப்பந்தத்தை, அப்படி இயங்கிக்கொண்டிருப்பதை பறைசாற்றும் விதமாகவே நடமாடியுள்ளனர்.

ஒரே ஒரு சின்ன இடத்தில் நடக்கும் கதை என்றாலும், படமாக்கலுக்கான அந்த சவாலில் வெற்றி கண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட். பிந்துமாலினி – வேதாந்த் இசை கதையின் வீரியம் குறையாமல் நம் மனதிற்குள் காட்சிகளை ஊடுருவ வைக்கின்றது.

ஒரு கனமான கதையை கையில் எடுத்துக்கொண்டு கடைசிவரை அதன் வீரியம் குறையாமல் படத்தை நகர்த்திச்சென்று ரசிகனின் இதயத்தை தாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.. ஆனால் அருவி படம் மூலம் அதை சரியாக செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன்.

‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’, ‘ஜோக்கர்’, ‘அறம்’ படங்களுக்குப்பின் அந்த வரிசையில் இந்த அற்புதமான ‘அருவி’யும் இடம்பிடித்திருக்கிறது.