கடைசி வரை அருண்விஜய்யிடம் ரகசியம் காத்த மகிழ்திருமேனி

Thadam Audio Launch

தடையறத் தாக்க என்கிற வெற்றிப் படத்திற்குப் பின்பு இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அருண் விஜய் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ள படம் தடம். இந்த படத்தில் வித்யா, தான்யா, ஸ்மிருதி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர் யோகிபாபு மற்றும் டிவி தொகுப்பாளர் தணிகை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருண் விஜய் தான் காதலிக்கும் தான்யாவிடம் தனது காதலை சொல்லிவிட நினைத்து அவரை ஒவ்வொரு முறையும் காபி சாப்பிட அழைப்பார். ஆனால் அவர் ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் அழைக்கும் முறை தப்பாக இருக்கிறது என கூறி ஒவ்வொரு முறையும் மறுத்து விடுவார் தான்யா. ஒரு வழியாக சரியான முறையில் வார்த்தைகளை கோர்த்து அவரை காபி சாப்பிட அழைத்துச் சென்று காதலை சொல்லி விடுவார் அருண்விஜய்.

இதை பார்த்துவிட்டு நிருபர்கள் அருண்விஜய்யிடம் அப்படி என்ன வசனத்தை சொல்லி நீங்கள் அவரை காபி சாப்பிட அழைத்தார்கள் என கேட்டனர்.. அதற்கு அவர், “படம் வரும்வரை அது என்னவென்று சஸ்பென்ஸாக இருக்கட்டுமே.. எனக்கே அந்த காட்சி படம் ஆகும் வரை இது தான் வசனம் என்று இயக்குனர் மகிழ்திருமேனி சொல்லாமலேயே தான், காட்சிகளை படமாக்கினார்… அதனால் உங்களுக்கும் கொஞ்ச நாட்கள் அது ரகசியமாகவே இருக்கட்டும்” என பதிலளித்தார் அருண்விஜய். இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது