ஆக்சன் ஏரியாவிலும் ரிஸ்க் எடுத்துள்ள ஸ்வீட் ராஸ்கல்..!

அரவிந்த்சாமி, அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப்படத்தை மலையாளத்தில் இயக்கிய இயக்குனர் சித்திக்கே இயக்கியுள்ளார்.

அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப் ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயசித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் பேசிய போது, “இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்காமலேயே அரவிந்த்சாமி இப்படத்தில் நடித்து கொடுத்தார். இயக்குனர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.” என்று கூறினார்.

நடிகர் அரவிந்த்சாமி பேசும்போது, “இயக்குனர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு. இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 ஆவது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.