அண்ணாதுரை – விமர்சனம்

annadurai movie review

அண்ணாதுரை-தம்பிதுரை என்கிற இரட்டையர்கள்.. இதில் காதலியின் மரணம் காரணமாக, வேறு திருமணம் பற்றி நினைக்காமல் சதா குடிகாரனாக மாறிவிட்டவர் அண்ணாதுரை.. பி.டி மாஸ்டராக வேலை பார்த்துக்கொண்டு தனக்கு பிடித்த உறவினர் பெண்ணான டயானா சாம்பிகாவை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்க இருப்பவர் தம்பிதுரை.

இந்தநிலையில் லோக்கல் கந்துவட்டி பார்ட்டி சேரன்ராஜிடம், நண்பன் காளி வெங்கட்டின் தொழிலுக்காக ஜாமீன் போட்டு பணம் வாங்கிக்கொடுக்கிறார் அண்ணாதுரை. ஆனால் அண்ணாதுரையின் அப்பா மீதான காழ்ப்புணர்ச்சியால், அந்தப்பணத்தை சேரன்ராஜ் திருப்பிக்கேட்டு வற்புறுத்துகிறார். இதனால் அவசரத்திற்கு தம்பியின் வருங்கால மாமனாரிடம் பணம் வாங்கி அதை செட்டில் செய்யும் அண்ணாதுரை, கடன் பத்திரத்தை திருப்பி வாங்காமல் சென்றுவிடுகிறார்.

இந்தநிலையில் உள்ளூரில் அழகுநிலையம் நடத்தும் ஜூவல் மேரி, அண்ணாதுரையை கல்யாணம் பண்ண விரும்புவதாக கூற, இனியும் தன்னால் தனது குடும்பம் வருத்தப்பட கூடாது என நினைக்கும் அண்ணாதுரை அதற்கு ஒப்புக்கொள்கிறார். ஆனால் அன்று மட்டும் கடைசியாக குடித்துக்கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு பாருக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி.. அந்த முடிவு அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையே புரட்டிப்போட போகிறது என்பதை அறியாமல்.

அப்படி என்ன நடந்தது..? குடும்பத்தாருக்கு அதனால் என்ன பாதிப்பு, அது தம்பிதுரையின் வாழ்க்கையை எப்படி மாற்றிப்போட்டது என்பது இடைவேளைக்குபின்னான மீதிப்படம்.

அண்ணாதுரை, தம்பிதுரை என இரண்டு கேரக்டர்களுக்கும் தாடி, மீசை மட்டுமல்லாமல் உடல் மொழியிலும் நிறைய வித்தியாசம் காட்டியுள்ளார் விஜய் ஆண்டனி. அதுமட்டுமல்ல, இடைவேளைக்குப்பின் இரண்டு பேருமே தாடியுடன் வலம் வந்தாலும் கூட அதிலும் தனது நடிப்பிலும் உருவத்திலும் இரண்டு கேரக்டர்களை கனகச்சிதமாக பிரித்துக்காட்டியுள்ளார் சென்டிமென்ட் மட்டுமல, ஆக்சன் காட்சிகளும் அவருக்கு பக்காவாக அமைந்துள்ளது

டயானா சாம்பிகா, மஹிமா, ஜூவல் மேரி என மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் டயானா தனது துறுதுறு நடிப்பால் நம்மை அதிகம் கவர்கிறார். மற்ற இருவரும் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். டயானாவின் தந்தையாக வரும் செந்தில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

காளிவெங்கட்டிற்கு கதையில் திருப்பம் ஏற்படுத்தும் குணச்சித்திர வேடம்.. வழக்கமாக கெட்ட போலீஸாக வரும் சேரன்ராஜ், இதில் முழுப்படத்திலும் லோக்கல் ரவுடியாக சிறப்பாக நடித்துள்ளார். எம்.எல்.ஏவாக வரும் ராதாரவிக்கு இதில் வேலை குறைவே.. இன்னொரு வில்லனாக பழைய ரஜினி பட மொட்டைபாஸ் வில்லன் உதய் ராஜ்குமார் என்பவர் தளபதி பட வில்லன் அம்ரீஷ்புரியை ஞாபகப்படுத்துகிறார். விஜய் ஆண்டனியின் பெற்றோராக ரிந்து ரவி, நளினிகாந்த் இருவரும் கிடைத்த நல்ல வாய்ப்பை. பயன்படுத்தி உள்ளார்கள்.

விஜய் ஆண்டனியின் இசையில் தங்கமா வைரமா பாடல் இனிமை.. பின்னணி இசையிலும் குறைவில்லாமல் தனது பங்களிப்பை தந்துள்ள விஜய் ஆண்டனி எடிட்டிங்கையும் ஒரு கை பார்த்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சியமைப்புகள், கதை நகரும் விதம் ஆகியவை எண்பதுகளில் வந்த கதைகளைப்போலவும், சமீபத்தில் வெளியான ஒரு நடிகரின் இரட்டை வேட படம் போலவும் சாயல் தெரிவதை தவிர்த்திருக்கலாம்.

இடைவேளையில் இடம்பெற்றுள்ள ட்விஸ்ட் உண்மையிலேயே எதிர்பாராதது தான். க்ளைமாக்ஸில் தம்பிக்காக அண்ணன் எடுக்கும் முடிவு வழக்கத்தில் இருந்து மாறுபட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும். படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் சீனிவாசன் விஜய் ஆண்டனியை வைத்து கமர்ஷியலாக படம் தரவேண்டும் என நினைத்துள்ளார்.. நிச்சயம் பி அன்ட் சி ரசிகர்களை இந்தப்படம் கவரும்..