“சின்ன படமா பெரிய படமா..? ; ரிலீஸான பின் தான் தெரியும்” – விஷால்

கட்டட வேலை செய்து இஷ்டம்போல வாழ்க்கையை ஓட்டும் ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.. அதன்பின் அவர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதை வைத்து ‘அஞ்சுக்கு ஒண்ணு’ என்கிற படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை ஆர்வியார் என்பவர் இயகியுள்ளார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை வழக்கம்போல சென்னையில் நடத்தாமல், நேற்று திருச்சியில் வைத்து நடத்தியுள்ளார்கள். இந்த விழாவில் திருச்சியில் முகாமிட்டுள்ள விஷால், நாசர், பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட தற்போதைய நடிகர் சங்க தலைமையை எதிர்க்கும் அணியினர் கலந்துகொண்டது ஆச்சர்யம்.

விழாவில் கருணாஸ் பேசும்போது, நாங்கள் பொறுப்புக்கு வந்தால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு 100 முதல் 150 தியேட்டர்கள் வரை கிடைக்க வழி செய்வோம்” என்றார்.. தொடர்ந்து பேசிய விஷால், “ஒரு படம் ரிலீஸான பின் தான் அது சின்ன படமா, பெரிய படமா என தீர்மானிக்க முடியும். புதுமுக நடிகர்கள் பொறுமையாகவும் நேர்மையாகவும் இருந்தால் வெற்றி பெறலாம். நான் அப்படித்தான் வெற்றி பெற்றேன்” என படத்தில் நடித்த புதுமுகங்களுக்கு ஆலோசனை கூறினார்.